ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை: மலைக்கோட்டையை பார்வையிட முடியாமல் தவிக்கும் மக்கள்
ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால் திண்டுக்கல் மலைக்கோட்டையை பார்வையிட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளது. பல்வேறு வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கும் இந்த மலைக்கோட்டையில் திண்டுக்கல் பூட்டு தொழிலின் சிறப்பை விளக்கும் வகையில் கோட்டையின் வாயில் கதவில் ராட்சத பூட்டு பொருத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மலைக்கோட்டையில் மன்னர்கள் காலத்தில் கைதிகளை அடைத்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட சிறைகள், எதிரிகள் கோட்டையை நெருங்காமல் தடுக்கும் வகையில் கோட்டைச்சுவரில் ஆங்காங்கே பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்வையிடுவதற்காக தினமும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மலைக்கோட்டையை பார்வையிட 3 மணி நேரத்துக்கு ரூ.25 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்காக மலைக்கோட்டை அடிவாரத்தில் டிக்கெட் விற்பனை செய்யும் கவுண்ட்டர்களும் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக மலைக்கோட்டையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மலைக்கோட்டையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மலைக்கோட்டைக்கு செல்வதற்கான டிக்கெட்டை அவர்கள் ஆன்லைன் மூலமே பெற வேண்டும்.
சுற்றுலா பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் மலைக்கோட்டையை பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகளை பெறலாம் அல்லது மலைக்கோட்டை அடிவாரத்தில் பே.டி.எம். என்ற செல்போன் செயலியின் கியூ.ஆர். கோடுடன் கூடிய அட்டை வைக்கப்பட்டிருக்கும். சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள பே.டி.எம். செயலியை பயன்படுத்தி அந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம். ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதால் கட்டணமும் ரூ.5 குறைந்து ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
பணப்பரிவர்த்தனை இல்லாமல் இணையதளம் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது என்றாலும் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்களிடம் ஆன்ராய்டு வசதியுடன் கூடிய செல்போன் இல்லை. இணையதள வசதி இல்லாத செல்போன்களையே பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதுபோன்ற நபர்கள் மலைக்கோட்டையை பார்வையிட வரும் போது ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை எடுக்க முடியாது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. எனவே ஆன்லைன் டிக்கெட் விற்பனை நடைபெற்றாலும் வழக்கம் போல் கவுண்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story