கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு


கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Dec 2020 3:26 AM IST (Updated: 20 Dec 2020 3:26 AM IST)
t-max-icont-min-icon

கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல் நடத்தியதாக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தினகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் தினகர். இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவரது தயாரிப்பில் வெளியான மை ஸ்டோரி என்ற மலையாள படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது. தினகரின் மனைவி ரோஷினியும் திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்து இருந்தது.2 மகன்கள் உள்ளனர். தினகரும், அவரது மனைவி ரோஷினியும் பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தினகருக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மனைவி ரோஷினிக்கு தெரியவந்து உள்ளது. இதனால் அவர் தினகரை தட்டி கேட்டு உள்ளார். இதன்காரணமாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்து உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தினகருக்கும், மாரத்தஹள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தினகரிடம், ரோஷினி கேட்டு உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறின் போது ரோஷினியை, தினகர் அடித்து, உதைத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ரோஷினி சம்பவம் குறித்து மாரத்தஹள்ளி போலீசில் தினகர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் தயாரிப்பாளர் தினகர் மீது மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் தினகரிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல் நடத்திய திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் கன்னட திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story