சென்னை மாநகராட்சியில் கூடுதலாக 350 பூங்காக்கள்; முதற்கட்டமாக 60 இடங்களில் பணி தொடங்கியது: கமிஷனர் தகவல்


சுகாதாரத்துறை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், நடிகர் விவேக் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டபோது
x
சுகாதாரத்துறை செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், நடிகர் விவேக் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டபோது
தினத்தந்தி 20 Dec 2020 4:15 AM IST (Updated: 20 Dec 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சியில் கூடுதலாக 350 பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 இடங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

‘மியாவாக்கி’ காடுகள்
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டலங்களில், மியாவாக்கி எனப்படும் ஜப்பானிய முறையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 25 வகையான, 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

இந்தநிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், மரக்கன்றுகளை நட்டு பார்வையிட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் வடக்கு வட்டார துணை கமிஷனர் ஆகாஷ், மருத்துவமனை இயக்குனர் விமலா, பொறுப்பு அலுவலர் டாக்டர் ஆனந்த குமார், நடிகர் விவேக் மற்றும் மண்டல அலுவலர் ராமபிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் கூறியதாவது:-

கூடுதலாக 350 பூங்காக்கள்
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆயிரம் இடங்களில் ‘மியாவாக்கி’ எனப்படும் அடர்வன காடுகள் உருவாக்குவதே எங்களின் இலக்கு. இதற்காக சென்னையில் வார்டு வாரியாக திறந்த வெளி நிலங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணக்கீடு செய்யப்பட்ட நிலங்களை ஒழுங்கு முறைப்படுத்தி, அடர்வனக்காடு உருவாக்குவதற்கு பட்டியல் தயார் செய்து வைத்துள்ளோம். மேலும், பல்வேறு இடங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மண்டல துணை கமிஷனர்கள், வட்டார துணை கமிஷனர்கள், மண்டல அலுவலர்கள் இது தொடர்பாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மியாவாக்கி அல்லாத, 675 பூங்காக்கள் உள்ளன. அந்தவகையில், பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சென்னையில் ஆயிரம் பூங்காக்கள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக 350 பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.

ரூ.36 கோடி செலவில்...
முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 60 பூங்காக்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. நகர்புறங்கள் அதிக வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், பொதுமக்கள் மாலை நேரங்களில் தங்களின் குடும்பத்தினருடன் ஆரோக்கியமாக பொழுதை களிப்பதற்காகவும், ஒரு சிறிய முயற்சியாக பூங்காக்கள் மற்றும் அடர்வனக்காடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து சேவை செய்து வருகிறது.

ஒரு நகரம் நல்லா இருக்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 33 சதவீதம் மரங்கள் நிறைந்து காணப்பட வேண்டும். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், கூவத்தின் இரு கரையோரங்களிலும், நேப்பியர் பாலம் முதல் பருத்திப்பட்டு வரையிலும், ரூ.36 கோடி செலவில், பல லட்சக்கணக்கான நாட்டு மரங்கள் நடும் பணி கூடிய விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நடிகர் விவேக் நிருபர்களிடம் கூறியதாவது:-

10 வருடங்களாக மரம் நடுகிறேன்
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு, கொரோனாவை கட்டுப்படுத்தி உள்ளது. நான் 10 வருடங்களுக்கு மேலாக மரம் நட்டு வருகிறேன். ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 2 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளதால், தற்போது கூடுதலாக 2 ஆயிரம் டாக்டர்கள் (மரங்கள்) பணியில் சேர்ந்துள்ளனர் என கூறலாம்.

ஒவ்வொரு மரமும் ஒரு தாய்க்கு சமம். கருவறையில் தாய் தரக்கூடிய ஆக்ஸிஜன் 10 மாதம் மட்டுமே. பின்னர் உலகத்துக்கு வந்து, விடைபெறும் வரை, நமக்கு ஆக்ஸிஜன் கொடுப்பது மரங்கள் தான். கொரோனா நோயாளிகள் கூட, ஆக்ஸிஜன் அளவு குறையும் போது மட்டுமே கவலைக்கிடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே ஆக்ஸிஜனை வாழ்நாள் முழுவதும் கொடுக்கக்கூடிய மரங்களை வளர்க்க வேண்டும்.

ஒரு இடத்தில் 33 சதவீதம் பசுமை இருக்க வேண்டும். பல இடங்களில் மரங்களை நடுவதை விட, ஒரு இடத்தில் பல மரங்களை, ஜப்பானிய முறையில் மரங்கள் நடப்பட்டு, அடர்வனம் உருவாக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story