ஆந்திராவில் ஏ.டி.எம். கொள்ளையில் தப்பியவர்கள் திருவள்ளூரில் பிடிபட்டனர்; கன்டெய்னர் லாரியும் சிக்கியது


கைது செய்யப்பட்ட ஹாசன், வாசிம்
x
கைது செய்யப்பட்ட ஹாசன், வாசிம்
தினத்தந்தி 20 Dec 2020 5:06 AM IST (Updated: 20 Dec 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் ஏ.டி.எம். கொள்ளையில் தப்பியவர்கள் திருவள்ளூரில் பிடிபட்டனர்.

ஏ.டி.எம். கொள்ளை
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குள்ள ஏ.டி.எம் மையத்தில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 500 கொள்ளை போனது. இது சம்பந்தமாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் 2 பேர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தப்பிய 2 கொள்ளையர்களின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்த போது அவர்கள் இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை மையமாக வைத்து காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் ஆகியோர் அந்த ஏ.டி.எம் கொள்ளையர்களை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கினார்கள்.

2 பேர் கைது
இதைத்தொடர்ந்து 2 மாவட்ட போலீசார் 100-க்கும் மேற்பட்டோர் கொள்ளையர்களை பிடிக்க களத்தில் இறங்கினார்கள். நேற்று முன்தினம் இரவு 10½ மணி அளவில் அவர்கள் இருவரும் திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கன்டெய்னர் லாரியை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அந்த லாரியில் ஆந்திர மாநில ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் தப்பிய 2 கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த லாரியை கைப்பற்றி அதில் இருந்த ராஜஸ்தான் மாநிலம் பராக்பூர் கிராமத்தை சேர்ந்த வாசிம் 32), அவரது நண்பரான ஹாசன் (30) ஆகியோரை கைது செய்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் பிடிபட்டது குறித்து ஆந்திர மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்தவுடன் பிடிபட்ட 2 கொள்ளையர்களையும் அவரிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story