மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை 2-வது முறையாக ஆஜராகாத பெண் சாமியார் பிரக்யா சிங்
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கு 2-வது முறையாக பா.ஜனதா எம்.பி. பெண் சாமியார் பிரக்யா சிங் ஆஜராகவில்லை.
மும்பை,
நாசிக் மாவட்டம் மாலேகாவ் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த வழக்கில் விசாரணையை விரைவாக முடிக்கும் வகையில் மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜனதா எம்.பி.யான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரை கடந்த 3-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பிரச்சினையை காரணம் காட்டி பிரக்யா சிங் ஆஜராகவில்லை. இதையடுத்து கோர்ட்டு வழக்கில் தொடர்புடையவர்களை நேற்று ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்றும் 2-வது முறையாக பிரக்யா சிங் விசாரணைக்கு ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் பிரக்யா சிங் ஆஜராகவில்லை என அவரது வக்கீல் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ பிரக்யா சிங் கடந்த ஏப்ரல் முதல் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது டாக்டர்கள் அறிவுரை, மருத்துவ அறிக்கையின் பேரில் அவர் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். “ என்றார்.
இதேபோல வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவர் சுதாகர் சதுர்வேதி சொந்த காரணங்களுக்காக விசாரணைக்கு ஆஜராகவில்லை. மற்ற 5 பேரும் ஆஜராகி இருந்தனர்.
Related Tags :
Next Story