இலக்கை நோக்கிய பயணத்தில் நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம் பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ரகவுடு பேச்சு


இலக்கை நோக்கிய பயணத்தில் நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம் பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ரகவுடு பேச்சு
x
தினத்தந்தி 20 Dec 2020 6:33 AM IST (Updated: 20 Dec 2020 6:33 AM IST)
t-max-icont-min-icon

இலக்கை நோக்கிய பயணத்தில் நம்பிக்கை வைத்தால் வெற்றி நிச்சயம் என்று பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.

பாகூர், 

பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா, அடையாள அட்டை வழங்கல், பாட சுருக்க கையேடுகள் வழங்கல் என முப்பெரும் விழா நடந்தது. மூத்த விரிவுரையாளர் மேரி ஆரோக்கியம் வரவேற்றார். தலைமை ஆசிரியர் தேவதாஸ் நோக்கவுரையாற்றினார். பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ரகவுடு கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையை திறந்து வைத்து, மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:-

தனியார் பள்ளி மாணவர்கள் தான் படித்து உயர் நிலைக்கு செல்கிறார்கள் என்ற எண்ணம் தவறானது. அரசு பள்ளிகளில் படித்த பலர் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். நானும், கிராமப்புற அரசு பள்ளியில் படித்தவன் தான். ஆசிரியர்கள் ஏணியை போன்றவர்கள், அவர்களை பயன்படுத்தி மாணவர்கள் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும்.

இலக்கு என்ன என்பதை முடிவு செய்து, அதை நோக்கி பயணம் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரிடமும் ஒரு திறமை இருக்கும். அதனை வெளிக்கொண்டு வரும் முயற்சிகளை ஆசிரியர்கள் செய்வார்கள். அந்த திறமை என்ன என்பதை மாணவர்கள் தான் வெளிப்படுத்த வேண்டும். இலக்கை நோக்கிய பயணத்தின் மீது நம்பிக்கையும், முயற்சியும் இருந்தால், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ, ஆசிரியர்கள் உருவாக்கிய பாட சுருக்க கையேட்டினை மாணவர்களுக்கு வழங்கினார். இந்தநிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் மீனாட்சிசுந்தரம், பெண் கல்வி இயக்குனர் நடனசபாபதி, தனசெல்வம், விளையாட்டு துறை இயக்குனர் நரசிங்கம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெய்வநாயகம், கோவிந்தராஜ், கஸ்தூரிபா காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் அகஸ்டின், ஓய்வு பெற்ற இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளி துணை முதல்வர் சிவராமரெட்டி நன்றி கூறினார்.


Next Story