ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி + "||" + Poster protesting against the change of co-commissioner of Srirangam Renganathar temple
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி.
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என்று சிறப்பித்து சொல்லப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 54 சன்னதிகளுடன் 254 ஏக்கர் பரப்பளவில் ஆன்மிகம், சுற்றுலா மற்றும் புராதன முக்கியத்துவம் கொண்ட சிறப்பு அம்சங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாகும். இந்த வருடத்திற்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14-ந்தேதி திருநெடுத்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கோவில் இணைஆணையர் ஜெயராமன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். முக்கிய விழா நடைபெறும் நாளில் இணை ஆணையர் மாற்றத்திற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் திருவரங்கம் நகர அடிப்படை உரிமைகள் மக்கள் நல பாதுகாப்பு சங்கத்தினர், கோவிலின் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி, புராதனச் சிறப்பை பாதுகாத்தமைக்கு யுனெஸ்கோ அமைப்பு சார்பில் சிறப்பு விருது பெற பாடுபட்ட இணைஆணையர் இடமாற்ற உத்தரவை ரத்து செய் என சுவரொட்டி அச்சடித்து ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அம்மாமண்டபம் பகுதிகளில் ஒட்டியுள்ளனர். இது ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவில் வட்டாரங்களில் கேட்ட போது, இணை ஆணையர் ஜெயராமன் கடந்த 6½ ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பணியாற்றி வருகின்றார். இடமாற்றம் என்பது அறநிலையத்துறை உள்பட அனைத்து துறைகளில் நடைபெறும் வழக்கமான ஒன்று தான். வேறு எந்த காரணமும் இல்லை. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழா என்பதால் விழா முடியும் வரை இங்கு தான் இருப்பார் என்றனர்.