வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து அரசு அதிகாரிகளுடன் மாநில நிதித்துறை செயலாளர் ஆலோசனை


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து அரசு அதிகாரிகளுடன் மாநில நிதித்துறை செயலாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 20 Dec 2020 1:28 AM GMT (Updated: 20 Dec 2020 1:28 AM GMT)

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளுடன் நிதித்துறை செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆலோசனை நடத்தினார்.

திருச்சி, 

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாகவும், வளர்ச்சிப்பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நிதித்துறை சிறப்பு செயலாளரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரீட்டா ஹரீஷ் தாக்கர் தலைமையில் ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ரீட்டா ஹரீஷ் தாக்கர், பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டம் நீர்வள ஆதாரம், அரியாறு வடிநிலக்கோட்டம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மேலும் ஏரி, குளங்களில் மழைநீர் சேகரிக்கப்பட்டது குறித்தும், கரைகள் பலப்படுத்தப்பட்டது குறித்தும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்தார்.

தடுப்பணைகள்

ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்கள், ஊரணி ஆகிய நீர்நிலைகளுக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சராசரியாக பெய்துள்ளது.

ஏரி, குளங்களில் நீரை சேமித்து வைக்க வேண்டும் என்றும், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மழை நீரை சேமிப்பதற்கு தடுப்பணைகள் கட்டப்பட்ட விவரம் குறித்தும், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கி உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என்றும், அந்தந்த நிதி ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளை அந்தந்த ஆண்டே கட்டி முடிக்க வேண்டும் என்றும், இதை போன்று பேரூராட்சி பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளையும் கட்டிமுடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஆக்கிரமிப்பு

வருவாய்த்துறையில் பட்டா மாற்றம் தொடர்பாக வரபெற்ற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்.

சுகாதாரத்துறையில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கையாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை அதிக பணியாளர்களை கொண்டு கொசு ஒழிப்புமேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இய க்குனர் சங்கர், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சத்தியபாலகங்காதரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story