தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது; குற்றாலத்தில் 2-வது நாளாக குளிக்க தடை


குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததை படத்தில் ; தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
x
குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்ததை படத்தில் ; தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
தினத்தந்தி 20 Dec 2020 7:05 AM IST (Updated: 20 Dec 2020 7:05 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

பரவலாக மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

இதனால் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நேற்று முன்தினம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் திறக்கப்பட்டது. இதேபோன்று சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
பாபநாசம் அணை பகுதியில் நேற்றும் பரவலாக மழை விட்டு விட்டு பெய்தது. அணைக்கு வினாடிக்கு 2,785 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2,836 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதேபோன்று முழு கொள்ளளவை எட்டிய கடனாநதி அணைக்கு வினாடிக்கு 441 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 512 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

மேலும் மாவட்டத்தின் மற்றொரு பிரதான அணையான 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் நேற்று 108 அடியை எட்டியது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,165 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

பிரதான கால்வாயில் வினாடிக்கு 445 கன அடி தண்ணீரும், பெருங்காலில் 35 கன அடி தண்ணீரும் பாசனத்துக்கு திறக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆங்காங்கே காட்டாறுகள், ஓடைகள் மூலமும் தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் கலக்கிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முருகன் கோவில்
நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், சிலர் ஆபத்தை அறியாமல் ஆற்றில் குளித்தனர்.

தாமிரபரணி ஆற்றின் மருதூர் தடுப்பணையின் மூலம் மேலக்கால், கீழக்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மேலக்காலில் வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும், கீழக்காலில் வினாடிக்கு 377 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளது. இதேேபான்று ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் தென்கால் வழியாக வினாடிக்கு 457 கன அடி தண்ணீரும், வடகால் வழியாக வினாடிக்கு 154 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது.

மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்)் வருமாறு:-

பாபநாசம்-12, சேர்வலாறு-17, மணிமுத்தாறு-3, அம்பை-6, சேரன்மாதேவி-2, பாளையங்கோட்டை-1, நெல்லை-1, கடனா- 12, கருப்பாநதி -4, குண்டாறு-4, சங்கரன்கோவில்-1, செங்கோட்டை-5, சிவகிரி-1.

கலெக்டர் எச்சரிக்கை

மழை நிலவரம் குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்துக்கு ஏற்ப உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. மழை அதிகரித்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் உடனடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். எனவே தாமிரபரணி ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் விழிப்புடன், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது..

இவ்வாறு அவர் கூறினார்.

குற்றாலம் அருவி
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்கவில்லை.

எனினும் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.

Next Story