இரண்டு வார காலமாக கூத்தியம்பேட்டை கிராமத்தில் குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீர்
கூத்தியம்பேட்டை கிராமத்தில் இரண்டு வார காலமாக குடியிருப்பை சூழ்ந்திருக்கும் மழைநீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கொள்ளிடம்,
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கூத்தியம்பேட்டை ஊராட்சி காமூட்டிகோவில் தெரு பகுதியில் வீடுகளை கடந்த இரண்டு வார காலமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் அந்த கிராமத்தின் அருகில் உள்ள தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் கோவிலில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியம் கூத்தியம்பேட்டை, காமூட்டிகோவில் தெரு ஆகிய பகுதிகளில் கனமழையால் கடந்த இரண்டு வாரங்களாக மழை நீர் தேங்கி கிடக்கிறது. மேலும் இந்த கனமழையால் ஆடு ஒன்று இறந்து விட்டது. இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் வருகின்றன. இதனால் நாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம். இதுவரை ஊராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதி மக்களின் நலன் கருதி தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்ற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story