குமரியில் ‘மினி கிளினிக்' தொடக்க விழா: ரூ.21 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் தளவாய் சுந்தரம் தகவல்


குமரியில் ‘மினி கிளினிக் தொடக்க விழா: ரூ.21 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் தளவாய் சுந்தரம் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2020 9:38 AM IST (Updated: 20 Dec 2020 9:38 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அம்மா மினி கிளினிக் தொடக்க விழாவில் தளவாய் சுந்தரம் கூறினார்.

நாகர்கோவில், 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் மட்டும் 15 நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்படும் என்று அறிவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சி பகுதியில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை நேற்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகத்தான திட்டம்

தமிழக முதல்-அமைச்சரின் சீரிய நோக்கத்தோடு உருவான மகத்தான திட்டம் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம் என்பது மிகவும் பெருமைக்குரியது.

அதனடிப்படையில் இன்று (அதாவது நேற்று) முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக முதல்-அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

புற்றுநோய் சிகிச்சை மையம்

மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் என 3 பணியாளர்களைக் கொண்டு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்குஉரிய மருத்துவ சிகிச்சை அளித்து மருந்துகள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவி, வெப்பநிலை கண்டறியும் வெப்பமானி உள்ளிட்ட அடிப்படை மருத்துவ உபகரணங்களுடன் ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நமது மாவட்டத்திலுள்ள ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு குமரி மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க ரூ.21 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தமிழக முதல்-அமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்று தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இந்திய சுகாதாரத் துறையின் தேசிய ஊரக சுகாதார நிலையத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

அம்மா பெட்டக பரிசு பொருட்கள்

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா பெட்டக பரிசு பொருட்களை தளவாய்சுந்தரம் வழங்கினார். முன்னதாக அவர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட ஆவின் தலைவர் அசோகன், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், ஆசாரிப்பள்ளம் அரசுமருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜ குமாரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிரு‌‌ஷ்ணகுமார், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் சாந்தினி பகவதியப்பன் (தோவாளை), அழகேசன் (அகஸ்தீஸ்வரம்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரமேஸ்வரன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஷேக், காட்டுப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் கிறிஸ்டிபாய் சின்னகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர் சந்துரு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன் சுந்தர்நாத், லதாராமசந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story