குறிப்பிட்ட அமைப்பு பெயர் எழுதப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு போலீஸ் விசாரணை
மார்த்தாண்டம் அருகே குறிப்பிட்ட அமைப்பு பெயர் எழுதப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
குழித்துறை,
திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் மார்த்தாண்டம் அருகே பயணம் பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் என்பவருக்கு சொந்தமான டெம்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்றுமுன்தினம் இரவு தன்னுடைய மோட்டார் சைக்கிளை வேலை பார்த்த இடத்திலேயே நிறுத்தி விட்டு ஆனந்த் தூங்கினார். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் தீ வைத்து எரித்ததாக தெரிகிறது.
சத்தம் கேட்டு ஆனந்த் ஓடி வந்தார். உடனே தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிளை அணைத்தார். அதற்குள் வாகனம் கருகி சேதமடைந்தது. மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தவர் யாரென்ற விவரம் தெரியவில்லை.
பரபரப்பு
அதே சமயத்தில், அந்த இடத்தின் அருகில் துண்டு சீட்டில் எழுதப்பட்ட வாசகங்கள் கிடந்தது. அதாவது, இது பெரியார் மண், இந்த மண்ணில் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் பெயரை கூறி அந்த அமைப்புக்கு இடம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அமைப்பின் பெயர், மோட்டார் சைக்கிளில் எழுதப்பட்டிருந்ததாகவும், இதனால் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்ததாகவும் கூறப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் துண்டு சீட்டை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story