நீர்வரத்து தொடர்ந்து வருவதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
நீர்வரத்து தொடர்ந்து வருவதால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
சாத்தனூர் அணை
தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும் 7321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நூற்றுக்கணக்கான ஏரிகள் நீர் ஆதாரங்களை பெற்று வருகின்றன.
மேலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வருகின்றன.
தொடர்ந்து நீர்வரத்து
கடந்த ஆண்டில் மழை பொய்த்த காரணத்தால் சாத்தனூர் அணை நிரம்பாமல் போனதால் விவசாயிகளும் பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்படுகிறது.
இதேபோல் கல்வராயன்மலை தொடர்களிலும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
100 அடியை எட்டியது
நேற்று காலை நிலவரப்படி சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 335 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. சாத்தனூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story