தந்தை இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - ஓசூரில் பரபரப்பு
ஓசூரில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் 2 குழந்தைகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இடையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் (வயது46). இவருடைய மனைவி ராதா. இவர்களுக்கு யஸ்வந்த்குமார் (12) என்ற மகனும், தனுஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். எடப்பள்ளி என்ற கிராமத்தில், யஷ்வந்த் குமார் 7-ம் வகுப்பும், தனுஸ்ரீ 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். நாகேஷ், ஓசூர் அருகேயுள்ள காமன்தொட்டி பகுதியில் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நாகேசுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேஷ் நேற்று உயிரிழந்தார். தந்தை இறந்த தகவல் அறிந்ததும் துக்கம் தாங்காமல் குழந்தைகள் யஸ்வந்த் மற்றும் தனுஸ்ரீ ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் 2 பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த துக்கத்தில் குழந்தைகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story