தொடர் மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் - விவசாயிகள் கண்ணீர்


தொடர் மழையால் சாய்ந்த நெற்கதிர்கள் - விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 20 Dec 2020 4:41 PM GMT (Updated: 20 Dec 2020 4:41 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடித்து உள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கின்றன. இந்தாண்டு அதிகளவு பலத்த மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இதற்கிடையே ஏற்கனவே பெய்த மழையை நம்பி சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் விவசாயம் செய்து உள்ளனர். தற்போது அந்த நெற்பயிர் நன்கு வளர்ந்து அறுவடை தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் விவசாய விளைநிலங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களில் மழைநீர் தேங்கியதால் அவை தரையில் சாய்ந்து சேதமாகி உள்ளது.

காரைக்குடியை சுற்றியுள்ள சாக்கோட்டை ஒன்றியம், கல்லல் ஒன்றியம், காளையார்கோவில் ஒன்றியம், இளையான்குடி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

கல்லல் ஒன்றியத்தை பொறுத்தவரையில் கல்லல், கொரன்டி, ஆலங்குடி, பாகனேரி அனவயன் காத்தான் கண்மாய்க்கு உட்பட்ட பகுதிகள், காடனேரி, பொய்யலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து உள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர் மழைநீர் தேங்கி நிற்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதை பார்த்து அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை அடுத்த முத்துராமலிங்க புரத்தில் சுமார் 300 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தனர். இந்த நெல் பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. சமீபத்தில் பெய்த மழைநீரில் வயலில் தேங்கியதால் நெற்பயிர்கள் சாய்ந்தன. அவற்றில் பெரும்பாலான நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கின.

இது பற்றி அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அவர்களிடம் விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நெற்பயிர் சேதம் அடைந்து இருப்பதை காண்பித்தனர்.

கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்ததால் சிங்கம்புணரியை ஒட்டியுள்ள அரசினம்பட்டி, எம்.கோவில்பட்டி, சூரக்குடி, சியா முத்துப்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை மற்றும் ஒடுவன்பட்டி, பிரான்மலை, வேங்கை கட்டி போன்ற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விளைந்த நெல் கதிர்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதை பார்த்து அப்பகுதி விவசாயிகள் கண்ணீர் வடித்து உள்ளனர். தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Next Story