புரெவி புயலால் கைகொடுத்த வடகிழக்கு பருவமழை


புரெவி புயலால் கைகொடுத்த வடகிழக்கு பருவமழை
x
தினத்தந்தி 20 Dec 2020 10:19 PM IST (Updated: 20 Dec 2020 10:19 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்கள் பற்றாக்குறையாக மழை பெய்த நிலையில் இந்த மாதம் புரெவி புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து கைகொடுத்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரேநீர் ஆதாரம் வைகை தண்ணீரும் வடகிழக்கு பருவமழையும்தான். இந்த நீர்ஆதாரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையே முழுமையாக கிடைத்து வந்துள்ளது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த கால வரலாறுகளில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து விவசாயம் மட்டுமின்றி நிலத்தடி நீர் ஆதாரமும் நன்றாக கூடியது. கடந்த ஆண்டு நன்றாக மழை பெய்ததால் இந்த ஆண்டு பெய்யுமா பெய்யாதா என்ற ஏக்கம் மக்களிடையே இருந்தது. ஆனால், ஆரம்பத்தில் சரியாக பெய்யாத நிலையில் இந்த மாதம் புரெவி புயல் மற்றும் வழக்கமான பருவமழை காரணமாக நல்ல மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலமான அக்டோபர் மாதத்தில் இயல்பான மழை அளவு 182.6 ஆகும். இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை தாமதமாக தொடங்கியதால் அக்டோபர் மாதம் 97.35 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்து 85.25 மில்லி மீட்டர் பற்றாக்குறையானது. கடந்த நவம்பர் மாத சராசரி மழை அளவு 206.3 என்ற நிலையில் மாவட்டத்தில் 187.63 மில்லி மீட்டர் பெய்து 18.67 பற்றாக்குறையானது. இதனால் பருவமழை வழக்கம்போல கடந்த ஆண்டு நன்றாக பெய்ததால் இந்த ஆண்டு கைவிட்டுவிடுமோ என்று அஞ்சிய நிலையில் புரெவி புயல் வந்து பருவமழையை கொட்டி தீர்த்துவிட்டது.

இவ்வாறு டிசம்பர் மாதத்தின் இயல்பான மழை அளவான 112.7 மில்லி மீட்டரில் இதுவரை 18 நாட்களிலேயே 261.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போதே இயல்பான மழை அளவினை விட 149 மில்லி மீட்டர் இதுவரை பெய்துள்ளதால் மீதம் உள்ள நாட்களில் மழைஅளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நன்றாக மழை பெய்து 384.41 மில்லி மீட்டர் பதிவானது. நவம்பரில் 188.34, டிசம்பரில் 189.79 மில்லி மீட்டரும் மட்டுமே மழை பெய்தது. இந்த ஆண்டு அக்டோபர், நவம்பரில் பற்றாக்குறை மழை பதிவாகி டிசம்பரில் புரெவி புயலால் அதிகபட்ச மழை பெய்து உள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் வடகிழக்கு பருவமழையின் சராசரி 501.60 மில்லி மீட்டர் என்பதால் இந்த ஆண்டு இதுவரை 546.78 மில்லி மீட்டர் பெய்து சுமார் 45 மில்லி மீட்டர் ஒட்டுமொத்தமாக அதிகமாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மாவட்டத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் கணிசமாக சேர்ந்து வருகிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நீர்ஆதாரம் பெருகி உள்ளதால் வரும் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Next Story