சிவகாசியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சிவகாசியில் அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
சிவகாசி பஸ் நிலையம் அருகில் புதுத்தெரு, பிச்சாண்டி தெரு ஆகியவை உள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக போதிய குடிநீர்வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி மக்கள் சிவகாசி நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். அதேபோல் இந்த பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாலையை சீரமைத்து தர கோரி பல முறை கேட்டும் அந்த சாலையை சீரமைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 60 பேர் அடிப்படை வசதி கேட்டு திடீரென பஸ் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story