இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுக்கவே வேளாண் சட்டங்கள் பரவாக்கோட்டையில் எல்.முருகன் பேச்சு


இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுக்கவே வேளாண் சட்டங்கள் பரவாக்கோட்டையில் எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 21 Dec 2020 6:26 AM IST (Updated: 21 Dec 2020 6:26 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுக்கவே ேவளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரவாக்கோட்டையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

மன்னார்குடி,

விவசாயிகளின் நண்பன் மோடி என்ற தலைப்பிலான சுற்றுப்பயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டு வருகிறார்.

அதன் பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்துக்கு வருகை தந்தார். அவருக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

விவசாயிகளுடன் கலந்துரையாடல்

பின்னர் விவசாயிகள் பங்கு பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம் வரவேற்றார். இதில் எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமர் மோடி விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறார். கிசான் கார்டு வழங்கி விவசாயிகளுக்கு கடன் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனால் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டதோடு விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

இடைத்தரகர்களால் இழப்பு

இடைத்தரகர்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்து விவசாயிகளை தொழில் அதிபர்களாகவும், பெரும் வியாபாரிகளாகவும் மாற்றுவதற்காகவே புதிய வேளாண் சட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார்.

ஆனால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவசாயிகள் முன்னேறி விடக்கூடாது, விவசாயிகளுக்கு நல்லது நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் வரதராஜன், நாகை வடக்கு மாவட்ட பார்வையாளர் பேட்டை சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானம் ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி துணை தலைவர் சிவ. காமராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் வி.கே.செல்வம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை

முன்னதாக பரவாக்கோட்டை எல்லையில் இருந்து மாட்டுவண்டியில் வந்த எல்.முருகன், பரவாக்கோட்டையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Next Story