புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை தஞ்சையில், மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி


புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை தஞ்சையில், மத்திய மந்திரி வி.கே.சிங் பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2020 6:51 AM IST (Updated: 21 Dec 2020 6:51 AM IST)
t-max-icont-min-icon

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தஞ்சையில், மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் நேற்று விவசாயிகள் நண்பன் மோடி என்ற தலைப்பில் பா.ஜ.க. சார்பில், வேளாண்மை சட்டங்களை விளக்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பண்ணைவயல் இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சதீ‌‌ஷ் வரவேற்றார்.

மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மாநில செயலாளர் வரதராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட பார்வையாளர் பி.எல்.அண்ணாமலை, விவசாயிகள் அமைப்பை சேர்ந்த மன்னார்குடி ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய மந்திரி பேச்சு

கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரி வி.கே.சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டு ராணுவ வீரர்கள் 96 சதவீதம் பேர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராணுவ பணி முடிந்ததும, விவசாயத்தை மேற்கொள்கின்றனர். ராணுவ வீரர்களும், விவசாயிகளும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்தவர்கள். தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படுகிறது. எதிர்க்கட்சியினர் முன்பு காவிரி பிரச்சினையை பற்றி பேசி வந்தனர். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என பலர் கூறி வந்தாலும், அதை யாரும் அமல்படுத்தவில்லை. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்ததும் அந்த அறிக்கையை கவனமாக பரிசீலித்து ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகிறார்.

நிரம்பி வழிகிறது

2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 1,700 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் 3,069 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பருப்பு 1.52 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் பா.ஜனதா. ஆட்சியில் 112.06 லட்சம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் இருப்பு வைத்து, கிடங்குகளில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

தற்போது விவசாயிகளை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்கட்சியினர் பொய் பிரச்சாரத்தால் ஏமாற்றி வருகிறார்கள். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும். எந்த பாதிப்பும் கிடையாது. வெளிச்சந்தையில் என்ன விலை உள்ளதோ அங்கு விற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த சட்டத்தின்படி ஒப்பந்தத்தில் பிரச்சினை என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை. அந்தந்த மாவட்ட கலெக்டரே பிரச்சினையை தீர்த்து வைக்கலாம்..

விவசாயிகள் கூற வேண்டும்

ஒப்பந்த விவசாயம் என்பது புதிதல்ல, இந்தியாவில் பல மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தில் நிலம் பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை. இந்த சட்டங்களில் உள்ள நன்மைகளை தமிழக விவசாயிகளும், குறிப்பாக டெல்டா விவசாயிகளும் தான் இந்தியாவில் உள்ள பிற விவசாயிகளுக்கு எடுத்து கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், கலெக்டரை விவசாயிகள் சந்திக்க முடியாத நிலை உள்ள போது, எப்படி இந்த சட்டத்தில் பிரச்சினையை தீர்க்க முடியும்?, எனவே இதற்காக தனியாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்’’ என கூறினர்.

பேட்டி

முன்னதாக மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவை பெரும்பாலான விவசாயிகள் ஆதரித்து வருகிறார்கள். இந்த சட்டத்தால் குறைந்தபட்ச ஆதார விலை பாதிக்கப்படாது. வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு கிடையாது. சட்டத்தின் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story