முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 21 Dec 2020 1:29 AM GMT (Updated: 21 Dec 2020 1:29 AM GMT)

அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(செவ்வாய்க்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். கிறிஸ்துமஸ் விழா மதநல்லிணக்க மாநாட்டில் அவர் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நாகர்கோவில்,

அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரை பங்கேற்கச் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

இதையொட்டி அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு நாளை(செவ்வாய்க்கிழமை) மதியம் வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு குமரி மாவட்டம் வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார். எனவே அரசு விருந்தினர் மாளிகையை சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் ஓய்வெடுக்கும் அறை, அங்கு போடப்பட்டுள்ள மெத்தை, நாற்காலி உள்ளிட்டவை சரிசெய்யப்பட்டன.

முதல்-அமைச்சர் சிறப்புரை

பின்னர், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து அருமனைக்கு காரில் புறப்பட்டு செல்கிறார். 8 மணி அளவில் அருமனை புண்ணியம் சந்திப்பை சென்றடையும் அவருக்கு, அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புண்ணியம் சந்திப்பில் இருந்து வள்ளக்களி, ஸ்கேட்டிங், கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம், பஞ்சாபி நடனம், மேஜிக்்ஷோ உள்ளிட்ட 42 கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டவாறு இரவு 9 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா மேடையை சென்றடைகிறார்.

அதைத்தொடர்ந்து கிறிஸ்துமஸ் விழா மதநல்லிணக்க மாநாடு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் தொடங்குகிறது. அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகிக்கிறார். கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ரசல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார்.

பாதுகாப்பு

விழா முடிந்ததும் இரவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டம் புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் ஓய்வெடுக்கும் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேரமும் பணியில் இருக்கும்படியான துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சரின் வருகையையொட்டி அவர் வந்து செல்லும் இடங்களில் எல்லாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விழா நடைபெறும் அருமனை பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தெரிவித்தார்.

Next Story