வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 21 Dec 2020 8:39 AM IST (Updated: 21 Dec 2020 8:39 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

பழனி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி முருகன் கோவில் விளங்குகிறது. புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பழனி முருகன் கோவிலுக்கு வருகிற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தைப்பூச திருவிழாவிற்காக, தற்போது பக்தர்கள் பலர் மாலை அணிந்து கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்தநிலையில் நேற்று வாரவிடுமுறையையொட்டி பக்தர்கள் வருகை அதிகம் காணப்பட்டது. அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக, பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அதிக அளவு குவிந்ததால் மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்கள் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசையில் அவர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இதேபோல் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள பஸ் நிலையங்களில் நிறுத்தினர். இதனால் பூங்கா ரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story