நாசரேத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேருக்கு வலைவீச்சு


நாசரேத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Dec 2020 10:43 AM IST (Updated: 21 Dec 2020 10:43 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் வீட்டில் பதுக்கிய ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாசரேத்,

நாசரேத் வாழையடி பத்திரகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, நாசரேத் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவில் ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கேசுவரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 37 மூட்டைகளில் மொத்தம் 520 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும்.

2 பேருக்கு வலைவீச்சு

போலீசாரின் விசாரணையில், நாசரேத் மோசஸ் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் ஜெயசீலன், திசையன்விளையைச் சேர்ந்த கொம்பையா ஆகிய 2 பேரும் சேர்ந்து பேபி அலீஸ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஜெயசீலன், கொம்பையா ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story