சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,600 வாக்குப்பதிவு எந்திரங்கள்


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 1,600 வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 21 Dec 2020 10:51 AM IST (Updated: 21 Dec 2020 10:51 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு 1,600 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.

ஈரோடு,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அதன்படி கடந்த மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் (தனி) ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நடந்தது.

அடுத்த மாதம் (ஜனவரி) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

மராட்டிய மாநிலம்

இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன. ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கூடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இறக்கி வைக்கப்பட்டன.

அரசியல் கட்சியினரின் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக அறைக்குள் சென்று வரிசையாக வைக்கப்பட்டன. இந்த பணிகளை ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 810 கட்டுப்பாட்டு கருவிகளும், நாசிக் மாவட்டத்தில் இருந்து 570 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 1,170 வி.வி.பேட் எனப்படும் வாக்காளர்கள் தாங்கள் அளித்த ஓட்டை சரிபார்க்கும் கருவியும் கொண்டு வரப்பட்டன.

இதேபோல் துளி மாவட்டத்தில் இருந்து 1,030 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 2 ஆயிரத்து 550 வி.வி.பேட் கருவிகளும் கொண்டு வரப்பட்டன. எனவே மொத்தம் 1,600 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 2 ஆயிரத்து 810 கட்டுப்பாட்டு கருவிகளும், 3 ஆயிரத்து 720 வி.வி.பேட் கருவிகளும் வரப்பெற்றன. இந்த கருவிகள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Next Story