செட்டிப்பாளையத்தில் உள்ள காடுகுட்டையில் நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணிகளை தொடங்கி வைத்தார்


செட்டிப்பாளையத்தில் உள்ள காடுகுட்டையில் நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணிகளை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Dec 2020 6:05 AM GMT (Updated: 21 Dec 2020 6:05 AM GMT)

செட்டிப்பாளையத்தில் உள்ள காடுகுட்டையில் நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்ட பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று தொடங்கி வைத்தார்.

கோவை,

கிணத்துக்கடவு மற்றும் சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட செட்டிப்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள், மற்றும் பொதுமக்கள், ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்பட்ட நீரினை செட்டிப் பாளையத்தில் உள்ள காடுகுட்டைக்கு நீரேற்றம் செய்தால், இப்பகுதிகளில் நீரின் தட்டுப்பாடு குறைந்து விவசாயப்பணிகள் அதிகரிக்கும் என கோரிக்கை மனு அளித்தனர். இந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று ரூ.4.76 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது கூறியதாவது:- இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எனக்கு முந்தைய தலைமுறையினர் விரும்பினர். தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தின் மூலம் நொய்யல் ஆற்று நீரானது ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றிற்கு 60 மில்லியன் கன அடி நீர் சுத்திகரிக்கப்படும். சுத்திகரிப்பு நிலையத்தில் 2.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட உள்ளது. இதில் 120 எச்.பி குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் இணைக்கப்படும். இந்த மின்மோட்டாருடன் இணைந்த பம்பு செட்டானது வினாடிக்கு 3.06 கன அடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டதாகும். இதன் மூலம் நாளொன்றிற்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீரை 16 மணி நேரத்தில் நீரேற்றம் செய்யமுடியும். காடு குட்டையின் மொத்த கொள்ளளவு 2.60 மில்லியன் கன அடி கொண்டதாகும். காடு குட்டையில் ஒரு முறை நீர் நிரப்ப 15 நாட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

ஒண்டிப்புதூர் நொய்யல் கரையிலிருந்து, காடுகுட்டை வரை 4, 590 மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டு, செட்டிப்பாளையம் கிராமத்திலுள்ள 14 குட்டைகளுக்கும், பீடம்பள்ளி கிராமத்திலுள்ள 9 குட்டைகளுக்கும், பட்டணம் கிராமத்திலுள்ள 4 குட்டைகளும் என மொத்தம் 10 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட 27 குட்டைகளுக்கு காடு குட்டையில் இருந்து ஈர்ப்பு விசை மூலம் நீர் செலுத்தப்படும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர வாய்ப்புகள் உள்ளதால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பொதுக் கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் உயர்ந்து குடிநீர் மிக எளிமையாக கிடைக்கும். வேளாண் பணிகள் மேம்படுத்தப்பட்டு சுமார் 30 ஆயிரம் விவசாய மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டு, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் எட்டிமடை சண்முகம், வி.பி.கந்தசாமி மற்றும் கோவை மாநகராட்சி துணை ஆணையாளார் மதுராந்தகி, இணை செயலாளர் செந்தில்குமார், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டு சங்கத் தலைவர் செல்வராஜ், மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ், செட்டிபாளையம் பேரூராட்சி செயலாளர் கண்டியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சூலூர் தாலுகா பீடம்பள்ளி ஊராட்சியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி் திறந்து வைத்து பார்வையிட்டதுடன், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்-சேய் நல பரிசு பெட்டகத்தினையும் வழங்கினார்.

Next Story