பெங்களூருவில் ஆபாச படத்தை அனுப்ப கூறி 13 வயது சிறுமிக்கு மிரட்டல் - இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் மீது போலீசில் புகார்


பெங்களூருவில் ஆபாச படத்தை அனுப்ப கூறி 13 வயது சிறுமிக்கு மிரட்டல் - இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 22 Dec 2020 5:08 AM IST (Updated: 22 Dec 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆபாச படத்தை அனுப்ப கூறி 13 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூருவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளாள். அந்த சிறுமி தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், அந்த சிறுமி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வந்தாள்.

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற சிறுமிக்கு, அவளது பெற்றோர் புதிதாக செல்போன் ஒன்றையும் வாங்கி கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் சிறுமி, தனது புதிய செல்போனில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியதாக தெரிகிறது. அப்போது ஒரு வாலிபர், சிறுமிக்கு நண்பராக இருக்க அழைப்பு விடுத்து இருந்தார். அதனை சிறுமியும் ஏற்றுக்கொண்டாள். பின்னர் 2 பேரும் இன்ஸ்டாகிராமில் தினமும் மணிக்கணக்கில் பேசி வந்து உள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிறுமியும், அந்த வாலிபரும் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. பின்னர் சிறுமிக்கு வாலிபர் தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் அனுப்பி வைத்து உள்ளார். அதுபோல சிறுமியும் தனது ஆபாச படத்தை அந்த வாலிபருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. ஆனாலும் அந்த வாலிபர் தொடர்ந்து சிறுமியிடம் ஆபாச படத்தை அனுப்பி வைக்கும்படி தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன சிறுமி, வாலிபருடன் பேசுவதை தவிர்த்தாள். மேலும் அந்த வாலிபரின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் முடக்கினாள்.

இந்த நிலையில் வேறு இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து சிறுமிக்கு குறுந்தகவல் அனுப்பிய வாலிபர், உனது ஆபாச படத்தை அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏற்கனவே அனுப்பிய ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மேலும் பயந்து போன சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினாள். இதனை கேட்டு அதிர்ந்த சிறுமியின் பெற்றோர் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் மீது பெங்களூரு தெற்கு பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

Next Story