தாவணகெரேயில் அரசு அலுவலகத்தில் சமூக நலத்துறை அதிகாரி தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் விசாரணை


தாவணகெரேயில் அரசு அலுவலகத்தில் சமூக நலத்துறை அதிகாரி தற்கொலை பணிச்சுமை காரணமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Dec 2020 5:18 AM IST (Updated: 22 Dec 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரேயில் அரசு அலுவலகத்தில், சமூக நலத்துறை அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாவணகெரே, 

தாவணகெரே டவுன் ஹரிஹரா சாலையில் சமூக நலத்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார் (வயது 46). இவர் தனது குடும்பத்தினருடன் தாவணகெரே டவுன் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள் வருவதற்கு முன்பே சிவக்குமார் பணிக்கு வந்து இருந்தார். பின்னர் தனது அறைக்கு சென்ற சிவக்குமார் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் பணிக்கு வந்த ஊழியர்கள், சிவக்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து காந்திநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் தூக்கில் தொங்கிய சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாவணகெரே மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சிவக்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எதுவும் எழுதி உள்ளாரா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் கடிதம் எதுவும் சிக்கவில்லை. இதனால் சிவக்குமாரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமாக சிவக்குமார் தற்கொலை செய்தாரா? உயர் அதிகாரிகள் தொல்லையால் உயிரை மாய்த்து கொண்டாரா? பணிச்சுமை காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காந்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அரசு அலுவலகத்தில் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாவணகெரேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story