ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தம்: பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 660 கன அடியாக அதிகரிப்பு
கிருஷ்ணா கால்வாயில் ஆந்திரா விவசாயிகள் பயிர்சாகுபடிக்கு கிருஷ்ணா தண்ணீர் எடுத்து வந்ததை நிறுத்தி கொண்டதால், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 660 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
கிருஷ்ணா நதிநீர்
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் 21-ந் தேதி முதல் ஆந்திரமாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, தற்போது வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான ‘நிவர்’ புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஆனால் ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதன் காரணமாக அந்த மாவட்ட விவசாயிகள் பயிர் சாகுபடிக்காக கிருஷ்ணா கால்வாயில் அதிக தண்ணீர் எடுக்க தொடங்கினர். அதன் காரணமாக பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 350 கனஅடியாக குறைந்தது.
இந்நிலையில் ஆந்திர விவசாயிகளுக்கு தேவையான அளவு நீர் கிடைத்துவிட்டதால், கிருஷ்ணா நதி கால்வாயில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் எடுத்து வந்ததை நிறுத்தி வருகின்றனர்.
ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. நேற்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு விநாடிக்கு 760 கனஅடியும், பூண்டி ஏரிக்கு 660 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 34.67 அடியாக பதிவாகியது. 3 ஆயிரத்து 38 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஏரிக்கு மழை நீர் வினாடிக்கு 310 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. ஏரியிலிருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு 242 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.
அதேபோல் பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு 21 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வினாடிக்கு 488 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story