அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை ஆதி திராவிடர் நல உயர்மட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆதி திராவிடர் நல உயர்மட்ட குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி,
ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்மட்ட குழு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் யாரும் வரவில்லை.
கூட்டத்தில் பேசிய ஆதி திராவிடர்கள் அமைப்பின் நிர்வாகிகள் இதனை சுட்டிக்காட்டினார்கள். ஆதிதிராவிடர்கள் நலனில் அக்கறை இல்லாமல் கூட்டத்துக்கு வராத அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி சமாதானம் செய்தார். கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து அரசு செயலாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலனுக்காக துறைவாரியாக செலவிடப்பட்ட தொகைகள் குறித்து சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் விளக்கவேண்டும் என்றும் அதன் பின்னரே கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பான நிலை நிலவியது.
இதையடுத்து அவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் சமரசப்படுத்தினார்கள். கூட்டத்தில் உயர்மட்டக்குழு கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன் பேசும்போது, சிறப்புக்கூறு நிதியாக ரூ.348 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ரூ.149 கோடி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் செலவிடப்படுகிறது. மீதமுள்ள நிதி பிற துறைகள் மூலம் செலவிடப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி நிதி தருகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அந்த நிதி வழங்கப்படுவதில்லை.
இதர பிற்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு நெல் பயிரிட ஏக்கருக்கு ரூ.5 ஆயிரமும், அதே அளவுதொகைதான் ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்படுகிறது. அந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும். புதுவையில் தீண்டாமை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. பல இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு கோவில் கதவு திறப்பதில்லை. ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்படும் குடியிருப்பு, மனைப்பட்டாக்களில் 20 சதவீதம் பிற சமூகத்தினருக்கு வழங்கப்படுகிறது.
ஆனால் அவர்கள் அங்கு குடியிருப்பதில்லை. விற்றுவிட்டு செல்கிறார்கள். அதை பழங்குடியினருக்காவது வழங்கலாம். வீடுகட்டும் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். புதுவையில் 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர். ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு என தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகூட இல்லை என்று குறிப்பிட்டார்.
முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி பேசும்போது, ஆதி திராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் என்றாலே அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். குறிப்பாக நிதித்துறை செயலாளர் அனைத்து கோப்புகளையும் திருப்பி அனுப்புகிறார். எல்லா திட்டங்களும் முடக்கப்படுகிறது.
வீடுகட்டுவதற்கான நிதியை ரூ.5 ஆயிரமாக உயர்த்தவேண்டும். ஆனால் வழங்கப்படவில்லை. ஆதிதிராவிடர்களுக்கான அனைத்து நலத்திட்டங்களிலும் அரசு செயலாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கவர்னருக்கு ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள் பற்றி எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் பேசுகையில், 28 துறைகளுக்கு ஒதுக்கிய சிறப்புக்கூறு நிதி குறித்து முதலில் அதிகாரிகள் இங்கு விளக்கவேண்டும். அதை தெரிவித்தால்தான் எங்களால் பேச முடியும். கூட்டத்துக்கு வரவேண்டிய அரசு செயலாளர்கள் யாரும் வரவில்லை என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story