புதுவை கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தடியடி மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு போராட்டம்
புதுவையில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு கேட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
புதுச்சேரி,
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதுச்சேரியிலும் இதுபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூடி புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த தீர்மானம் மீதான கோப்பு கவர்னர் கிரண்பெடியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து அதை மத்திய அரசின் பரிசீலனைக்கு அவர் அனுப்பிவிட்டார்.
கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த கோப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்று உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து பேசிவந்தனர். ஆனால் இதுவரை 10 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்கவில்லை.
இந்தநிலையில் வரும் 31-ந் தேதிக்குள் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கழகம் கெடு விதித்தது. இதனால் ஏற்பட்ட சிக்கலையடுத்து ஒருவாரத்துக்குள் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போது தான் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது அரசு பள்ளியில் படித்தவர்கள் சேர முடியும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.
இந்தநிலையில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கக்கோரி மாணவர் காங்கிரசார் புதுவை அண்ணாசிலை அருகே தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 3-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.
இத்தகைய சூழ்நிலையில் மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் புதுவை ரோமன்ரோலண்ட் நூலகம் அருகே வந்தனர். மேலும் அரசுப்பள்ளி மாணவர்கள் சுமார் 100 பேர் அங்கு வந்தனர்.
திடீரென அவர்கள் கவர்னர் மாளிகைக்கு முன்பக்கமாக செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டைகளை தள்ளிக்கொண்டு கவர்னர் மாளிகைக்கு முன்பு செல்ல முயன்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனால் போலீசார் மற்றும் மாணவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்புக் கட்டைகளை தள்ளிக்கொண்டு கவர்னர் மாளிகை முன்பு சென்று தர்ணாவில் அமர்ந்தனர். அப்போது அவர்கள் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணாவில் ஈடுபட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் நிர்வாகிகளை கைது செய்து ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் அந்த ஜீப்பினை முற்றுகையிட்ட மாணவர்கள் அதை செல்ல விடாமல் மறித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்தனர். கைதான அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக கவர்னர் மாளிகை முன்பு பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story