திருவோணம் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்


திருவோணம் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 7:15 AM IST (Updated: 22 Dec 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணத்தை அடுத்த சிவவிடுதி காமாட்சி தெருவை சேர்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 70 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. சிவவிடுதி கட்டுவான்பிரை பிரதான சாலையில் இருந்து 700 மீட்டர் தூரத்தில் காமாட்சி தெரு உள்ளது. எங்கள் தெருவிற்கு செல்லும் சாலையில் முதல் பகுதியில் 160 மீட்டருக்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பாதை ஆக்கிரமிப்பு

மீதமுள்ள நிலங்களின் உரிமையாளர்கள் 5 பேர் சாலை அமைக்க இடம் வழங்கினர். இதன் அருகே உள்ள இடத்தை நாங்கள் பாதையாக பயன்படுத்தி வந்தோம். அந்த இடத்தை இன்னொருவர் வாங்கிய போது நாங்கள் பாதை குறித்து கேட்ட போது, நீங்கள்செல்வதற்கு எந்த இடையூறும் செய்ய மாட்டோம் என தெரிவித்தனர்.

ஆனால் தற்போது அந்த பாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதிக்கு ஆம்புலன்ஸ், கார் உள்ளிட்ட எந்த வாகனங்களும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். இதனால் மிகவும் க‌‌ஷ்டப்படுகிறோம். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, நிரந்தரமாக சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திடீர் போராட்டம்

இந்த நிலையில் மனு கொடுத்துவிட்டு வந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வாயில் முன்பு திடீரென தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அவர்களை சமரசம் செய்தனர். மேலும் சம்பவ இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story