தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும் சேலத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு


தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும் சேலத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 22 Dec 2020 9:51 AM IST (Updated: 22 Dec 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும் என்று சேலத்தில் தயாநிதிமாறன் எம்.பி. கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, ஓமலூர் சட்டசபை தொகுதிகளில் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்வதற்காக முன்னாள் மத்திய மந்திரியும், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன் நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சிலைக்கு மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து மாநகரில் உள்ள ராஜாஜி, தந்தை பெரியார், காந்தி, அண்ணா, அம்பேத்கர், காமராஜர், விஜயராகவாச்சாரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்

இதையடுத்து சேலம் மெய்யனூர் பகுதி தி.மு.க. சார்பில் வரலட்சுமி மகாலில் கட்டிட தொழிலாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தயாநிதிமாறன் எம்.பி., கலந்து கொண்டார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகர செயலாளர் ஜெயக்குமார், மெய்யனூர் பகுதி செயலாளர் சக்கரை சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சாந்தி சீனிவாசன், ரமேஷ்பாபு, எஸ்.பி.எல்.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்டிட தொழிலாளர்கள், மணல், சிமெண்டு, கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் கட்டுமான தொழில் பாதிப்பு, எம்.சாண்ட் மோசடி, ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினர்.

வளர்ச்சி ஏற்படவில்லை

இதற்கு பதில் அளித்து தயாநிதிமாறன் எம்.பி. பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் இருட்டறைக்கு சென்றுவிட்டதால் தான் விடியலை நோக்கி என்ற தலைப்பை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.ஜெயலலிதா இருந்தபோது அவர் மீதான ஊழல் புகார்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அதற்குபின் வந்த இவர்கள் ஊழலே கதி என கிடக்கிறார்கள். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை உண்மை வெளிவரவில்லை.

நல்லாட்சி அமையும்

தி.மு.க. ஆட்சியில் சேலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதனை செயல்படுத்தவில்லை. இரும்பாலையை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, போராடி பெற்று கொடுத்த நிலையில் அதனை தற்போது தனியாருக்கு விற்பனை செய்ய பா.ஜ.க. நடவடிக்கை மேற்கொண்டு வருவதை தமிழக முதல்-அமைச்சரால் தடுக்க முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நமது உரிமைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டது.

முதல்-அமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் முருகன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடுத்து மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சர் என்று பொதுமக்களே முடிவு செய்துவிட்டார்கள். விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நல்லாட்சி அமையும்.

இவ்வாறு தயாநிதிமாறன் எம்.பி. பேசினார்.

உருக்காலை தொழிலாளர்கள்

இதனை தொடர்ந்து தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி பகுதியில் தேங்காய்நார் கயிறு திரிக்கும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடனும், அதன்பிறகு சேலம் உருக்காலை, தமிழ்நாடு மேக்னசைட், டால்மியா தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுடனும் தயாநிதிமாறன் எம்.பி., கலந்துரையாடினார். அப்போது அவர்கள் மத்தியில் பேசும்போது, கயிறு திரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொழில்பேட்டை அமைக்கப்படும். உருக்காலை தனியார் மயமாக்கலை கைவிட தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.இதையடுத்து ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் கைவினைஞர்கள், தச்சர்கள், விவசாய தொழிலாளர்களுடனும், சிவதாபுரம் பகுதியில் வெள்ளி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுடனும் தயாநிதிமாறன் எம்.பி., கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

Next Story