400 வருடங்களுக்கு பின் வானில் தோன்றிய அபூர்வ நிகழ்வு கொடைக்கானலில் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்


400 வருடங்களுக்கு பின் வானில் தோன்றிய அபூர்வ நிகழ்வு கொடைக்கானலில் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 22 Dec 2020 10:20 AM IST (Updated: 22 Dec 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

400 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அபூர்வ நிகழ்வினை கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

கொடைக்கானல்,

வானில் வியாழன் மற்றும் சனி கோள்கள் 400 ஆண்டுகளுக்கு பின் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் நிகழ்வு நேற்று காணப்பட்டது. இந்த அபூர்வ நிகழ்வை காண்பதற்காக, கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்காக தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வினை காண சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 550 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

நுழைவு கட்டணம் நிர்ணயம்

சிறிது நேரமே தென்பட்ட இந்த நிகழ்வினை அவர்கள் தொலைநோக்கிகள் மூலம் பார்த்து ரசித்தனர். இதில் சிலர் வெறும் கண்களாலே பார்த்தனர். ஆனால் அதனை தொடர்ந்து மேகமூட்டம் நிலவியதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதை காண நுழைவுக் கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வினை காண முடியாதவர்கள் நாளை (இன்று) இதே அடையாள அட்டையை காண்பித்து இந்த நிகழ்வினை காணலாம் என வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதனிடையே கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த அரிய நிகழ்வை காண பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சரியாக தெரியாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story