‘வீட்டை காக்கும் இல்லத்தரசிகள் நாட்டையும் காக்க முன்வருவார்கள்’ செஞ்சியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு


‘வீட்டை காக்கும் இல்லத்தரசிகள் நாட்டையும் காக்க முன்வருவார்கள்’ செஞ்சியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 22 Dec 2020 11:26 AM IST (Updated: 22 Dec 2020 11:26 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை காக்கும் இல்லத்தரசிகள் நாட்டையும் காக்க முன்வருவார்கள் என்றும் செஞ்சியில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினர்.

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில செயலாளர் செஞ்சி ஸ்ரீபதி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சினேகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

எந்த நிலை வந்தாலும் நாம் கண்ணியம் தவறமாட்டோம். அவர்கள் அவதூறு பேசினாலும் அதற்கு நேர்மையான பதிலை தான் தருவோம். நான் தலைவனாக வேண்டும், ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் வரவில்லை.

செஞ்சியில் வந்தால் கோட்டையை பிடிக்க வேண்டும். இங்கேயே ஒரு கோட்டை உள்ளது. அதில் வேண்டும் என்றால் கொடியை நட்டுக்கொள்ளுங்கள் என்று ஒருவர் சொன்னார். உங்கள் ஆசை நிறைவேறும் அமைச்சரே. இங்கேயும் கொடி நடுவோம், எங்கேயும் கொடிநடுவோம். இது மக்களின் கொடி. நடவேண்டியது நாங்கள் அல்ல மக்கள்.

கஜானாவுக்கு தடுப்பணை...

செஞ்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை உள்ளது. கையாடல் செய்வதை நிறுத்தி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்தால் செஞ்சிக்கு சுத்திகரிக்கப்பப்ட குடிநீர் கிடைத்து இருக்கும். இங்கு சுற்றுலா தகுதிகள் அபாரமானது. அதை இன்னும் வலுப்படுத்த வேண்டும். அதை செய்ய முடியும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணைகள் கட்ட முடியும். தேவையற்ற அணைகளை இடிக்கவும் முடியும். ஒரு நல்ல ஆட்சியாளரிடம் விட்டால், தண்ணீர் மேலாண்மை சிறப்பாக இருக்கும் படி செய்ய முடியும். தடுப்பணை கட்டுகிறமோ இல்லையோ, கண்டிப்பாக கஜானாவுக்கு தடுப்பணை போட வேண்டும்.

எங்களது திட்டங்களை சொல்லும் போது கொக்கரித்தார்கள். குடும்ப தலைவிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பது எங்களது பரிந்துரை, அதை சட்டமாக்க வேண்டும் என்பது எங்களது எண்ணம். விவசாயி என்கிற சொல் ஆண்களை மட்டுமல்ல அதில் ஈடுபடும் பெண்களையும் குறிக்கும். அந்த நலத்திட்டத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.

விவசாயியின் தாயாரும் விவசாயி தான். அப்படிப்பட்ட திட்டத்தை வைத்துள்ளோம். அதை செயல்படுத்தவும் துடிக்கிறோம். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சமமான உரிமை, சமமான சம்பளம் என்று இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். இது ஒரு புரட்சியே அல்ல, செய்ய கூடியவை தான்.

மாற்றத்தை தாருங்கள்

வீட்டை காக்கும் இல்லத்தரசிகள் நாட்டையும் காக்க முன்வருவார்கள். திரளாக வாருங்கள் மாற்றத்தை தாருங்கள் என்பது எங்களது வேண்டுகோள்.

அரசியல் வாதிகள் ஆள்கிறார்கள் என்று சொல்லும் வார்த்தையே தவறு என்று நினைக்கிறேன். உங்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள். அதில் யாரும் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. முழுநேர அரசியல் வாதியாக என்று என்னை கேட்கிறார்கள். யாரும் முழுநேர அரசியல் வாதியா இருக்கவே முடியாது. முழுநேர அரசியலை நம்பி மட்டுமே வந்துள்ளேன் என்று இருக்கும் போது தொக்கி நிற்பது, இதுதான் எனது வருவாய் என்று உள்ளது. அதில் தான் தவறு உள்ளது. நேற்று வரைக்கும் சின்ன டீக்கடை வைத்திருந்தவர் பணக்காரரே பொறாமை படும் அளவுக்கு, பெரும் பணத்தில் புரண்டு கொண்டு உள்ளார்.

எனக்கு கோபம் வருகிறது

என்னிடமா கேட்கிறீர்கள் வெள்ளை பேப்பர். நான் கொடுக்கிறேன். வருமான வரி சரியாக கட்டுகிறேனா என்கிற வாக்குமூலம் வேண்டும் என்றால், வருமான வரித்துறையினரிடம் கேளுங்கள். சரியான வரிகட்டுபவர்கள் யார்? யார்? உள்ளனர் என்று பட்டியல் வைத்திருப்பார்கள். அதில் என் பெயர் எந்த இடத்தில் உள்ளது என்று பாருங்கள். என்னை தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லமாட்டேன். நான் அந்த பட்டியலில் முக்கியமான இடத்தில் இருப்பவன். அதனால் தான் வருமான வரித்துறையே என்னை அழைத்து சரியாக வரி கட்டுபவர்களுக்கு பரிசு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

இந்த நேர்மைக்கு என்று ஒரு தனி மரியாதை, திமிரு உண்டு. எங்கள் மூக்கில் விரல் வைத்தால், அப்புறம் சோற்றில் கை வைக்க முடியாது விரல் முறிந்துபோய்விடும். என்ன வன்முறையாக பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா?. எனது நேர்மையை சொன்னால் எனக்கு கோபம் வருகிறது.

எம்.ஜி.ஆரை மறந்துவிட்டார்கள்

ஒருமுறை தேவையில்லாமல் எனது நேர்மையில் கை வைத்தார்கள். கவிதைக்கும் தமிழுக்கும் பாரதியார் போல், நான் சினிமாவுக்கு பாரதி. என் தலைப்பாகையில் (டர்பனை) தட்டாதே என்று சொன்னேன். சொல்ல சொல்ல கேட்காமல் தட்டிவிட்டு, தற்போது வேறு சிகை அலங்காரம் வைத்து இருக்கிறார்கள். அது எம்.ஜி.ஆர். தொப்பி என்று எனக்கு வைத்துள்ளார்கள். இதை அவர்கள் தான் தூக்கி வைத்தார்கள். நான் வைக்கவில்லை. பாவம் அவர்கள் எம்.ஜி.ஆரை மறந்து விட்டார்கள். எனக்கு ஒரு பெருமை உண்டு என்றால் மீண்டும் அவர்களது கட்சி கூட்டங்களில் எம்.ஜி.ஆர். படத்தை சிறப்பான இடத்துக்கு கொண்டு சேர்த்தது.

இந்த குறை வெகுகாலமாக ரசிகர்களுக்கு இருந்த குறை. அதை தீர்த்த பெருமை மக்கள் நீதிமய்யத்தை சேரும். நாங்கள் தான் படம் வைத்தோம், இவர் ஏன் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இதெல்லாம் சரி பேட்டி நடந்து கொண்டு இருக்கும் போதே பாதியில் கொண்டு வந்து இடைசெருகல் மாதிரி எம்.ஜி.ஆர். படத்தை வைத்தீர்களே.

செழுமை கோடு

நாங்கள் மக்களுக்கு செய்ய நினைத்ததை பட்டியலிட்டு செய்தியாக வெளியிட்டு வருகிறோம். 7 அம்ச திட்டங்களை அறிவித்துள்ளோம். தொடர்ந்து திட்டங்களை அடுக்கி கொண்டே செல்வோம். அத்தனையும் தரமான, வளம் சேர்க்கும் திட்டங்கள். புதிதாக செழுமை கோடு என்கிறீர்களே அது என்ன? என்கிறார்கள்.

அதாவது, வறுமை கோட்டுக்கு கீழே செல்ல இடமில்லை, இறப்பு தான். ஏனெனில் வறுமைகோட்டுக்கு மேலே வந்துவிட்டவன் சிறு மாற்றங்கள், பணவீக்கம் ஏற்பட்டாலோ மறுபடியும் வறுமை கோட்டுக்கு கீழ் செல்வான். அவரை, அந்த தமிழ் மகனை செழுமை கோட்டுக்கு மேல் வைத்தால் விழுந்தாலும் வறுமை கோட்டுக்கு மேல் தான் விழுவான். எழுந்தால் செழுமைகோட்டுக்கு மேல் எழுவான், தமிழகத்தை காப்பான். தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் கனவு. அதை நிறைவேற்றும் தைரியம், திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது.

முன்கூட்டியே தேர்தல்

நீங்களும், நானும் கைகோர்த்தால் நாளை நமதே. அதே நோக்கி தான் நகர்ந்து கொண்டுள்ளோம். தேர்தல் முன்கூட்டியே வந்தால் அதை நாங்களும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் அனுமதி மறுப்பு

இதில் மாநில துணைத் தலைவர் மகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் மவுரியா, மாநில செயலாளர்கள் மூகாம்பிகை ரத்தினம், மயில்சாமி, முரளிஅப்பாஸ், ராஜசேகர், மூர்த்தி மற்றும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி ராபின், மாவட்ட செயலாளர் அருள், நற்பணி மன்றம் பாரி, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், ஞானமூர்த்தி, குமரேசன், நகர செயலாளர் சத்தியமூர்த்தி, இளைஞரணி ஒன்றிய செயலாளர் தினே‌‌ஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக செஞ்சி வந்த கமல்ஹாசனுக்கு செஞ்சி கூட்டு ரோட்டில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில செயலாளர் செஞ்சி ஸ்ரீபதி செய்திருந்தார்.

முன்னதாக செஞ்சி கூட்டு ரோட்டில் பேசுவதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், அங்கு எதுவும் பேசாமல் மக்களை நோக்கி கையசைத்து விட்டு கமல்ஹாசன் சென்றார்.

மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

முடிவில் கமல்ஹாசன் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது டெல்லியில் இடைத்தரகர்கள் தான் போராடுகிறார்கள், விவசாயிகள் போராடவில்லை என்று கு‌‌ஷ்பு கூறியது குறித்து கேள்வி எழுப்பிய போது, இது தவறான புரிதல் அங்கு இருப்பவர்கள் இடைத்தரகர்கள் அல்ல. சேற்றில் கால் பதித்தவர்கள். இங்கிருந்து போய் அவர்களுக்காக ஆதரவுக் குரல் கொடுப்பவர்களும் விவசாயிகள் தான். இடைத்தரகர்கள் என்று பேசுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறினார்

அ.தி.மு.க. அமைச்சர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கமல்ஹாசன் காணாமல் போய் விடுவார் என தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்களே என்று கேட்ட போது, அது அவர்களின் பயம் அவர்களின் பிரார்த்தனை என்றுதான் நினைக்கிறேன். அது நடக்குமா? நடக்காதா? என மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story