கூத்துக் கலைஞரின் வாழ்வாதாரத்தை உன்னித்து கவனித்து வருகிறேன்; நடிகர் கமல்ஹாசன் பேச்சு
கூத்துக் கலைஞரின் வாழ்வாதாரத்தை நான் உன்னித்து கவனித்து வருகிறேன் என்று கமல்ஹாசன் பேசினார்.
வரவேற்பு
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் திருவண்ணாமலை நகர மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திருவண்ணாமலை அண்ணா சிலை, காந்தி சிலை, மாட வீதி, சின்னக்கடை தெரு ஆகிய 4 இடங்களில் மக்களை வேனில் இருந்த படி சந்தித்தார். பின்னர் போளூர் சாலையில் உள்ள ஓட்டல் ராமகிருஷ்ணாவில் நடைபெற்ற முக்கிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
பின்னர் திருவண்ணாமலை அவலூர் பேட்டை பைப்பாஸ் சாலையில் உள்ள ராஜாராணி மகாலில் இரவு 9 மணியளவில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கடமையை செய்ய விரும்புகிறேன்
எங்களிடம் நேர்மையானவர்களும், திறமையானவர்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் கைகோர்த்து உதவ வேண்டும். 5 வயது முதல் 60 வயது வரை திரைப்படத்தில் இருந்து விட்டு அப்படியே இறப்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மானமுள்ள தமிழனாக என் கடமையை செய்ய விரும்புகிறேன். தமிழகத்தை சீரமைக்கவும், தலை நிமிர்த்தவும் வேண்டும்.
மலைவாழ் மக்களுக்கு வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. செய்யாறில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க நேர்மையானவர்கள் வரவேண்டும். 50 ஆண்டுகளாக உள்ள குப்பை கிடங்கை வெளி இடத்திற்கு மாற்ற நாங்கள் தான் வர வேண்டும். முறையாக பாசன வசதிகளை சீரமைக்காமல் மக்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாயக்கர் காலத்தில் உள்ள ஏரி குளங்களை மீட்டெடுப்போம். கலை, இலக்கியம் மிகுந்த பகுதி திருவண்ணாமலை.
கவனித்து வருகிறேன்
திருவண்ணாமலையில் கூத்துக் கலைஞர்கள் அதிகம் உள்ளனர். நானும் கூத்துக் கலைஞன் தான். கூத்துக் கலைஞரின் வாழ்வாதாரத்தை நான் உன்னித்து கவனித்து வருகிறேன். மக்கள் என்னை பாசமாக ஆண்டவர் என்று அழைக்கின்றனர். ஆனால் நான் உங்களுக்கு தொண்டன் தான். பல்வேறு அறிவிப்புகளை நாம் தெரிவித்து விட்டோம். இனி உங்களது பணி வீடு, வீடாக சென்று அதனை நினைவுபடுத்தி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் சிலர் கண்கட்டி வித்தை காட்டி கலைத்துவிட பார்ப்பார்கள். அவ்வாறு இருக்க நாம் விடக்கூடாது. 4 வருடம் கழித்து நான் திருவண்ணாமலைக்கு மீண்டும் வரும் பொழுது திருவண்ணாமலை இப்படி இருக்காது. அதற்கு நீங்கள் போராட வேண்டிய அவசியம் இல்லை. ஒரு விரலில் மை வைத்து நமது முத்திரையில் பதிவிட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தென் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் அருள் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story