தமிழகத்துடன் சேர்த்து புதுவை சட்டசபைக்கு தேர்தல் - தேர்தல் ஆணைய குழுவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
தமிழகத்துடன் சேர்த்து புதுவை சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணைய குழுவிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
புதுச்சேரி,
புதுவை சட்டசபைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான குழுவினர் நேற்று மாலை புதுவை வந்தனர்.
நூறடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தேர்தல் குழுவினர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசினார்கள். அப்போது தேர்தல் குழுவினரிடம் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், துணைத்தலைவர் நீல.கங்காதரன் ஆகியோர் இந்த குழுவினை சந்தித்தனர். அதன்பின் ஏ.விசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்,
புதுவை மாநில சட்டசபை தேர்தலை தமிழகத்தோடு சேர்த்து நடத்த வேண்டும். தமிழகத்தில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தினால் புதுவை மற்றும் காரைக்காலை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் எந்த தேதியில் தேர்தல் நடத்தப்படுகிறதோ? அதே தேதியில் இங்கும் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பூகோள ரீதியில் தமிழகமும், புதுச்சேரியும் பின்னிப் பிணைந்து உள்ளன. அதனால் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும்போது புதுவையிலும் தேர்தலை நடத்த வேண்டும். தொற்று காலத்தில் வாக்குச்சாவடிகளில் சுகாதார ரீதியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்கவேண்டும். தமிழக பகுதியில் வசிப்பவர்கள் பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதை நீக்க வேண்டும்.
தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரி தாய்மொழியான தமிழ் தெரிந்தவராக இருப்பது அவசியம். அவ்வாறு இருந்தால்தான் பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் எடுத்து சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் கொடுத்த மனுவில்,
தேர்தலின்போது இலவசங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டிய நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். கனமழை காரணமாக பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய முடியவில்லை. அதற்கான அவகாசம் அளித்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்று திறனாளிகள் பயன்பெறும் வகையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள தபால் வாக்கு முறையில் தவறு நடைபெறாத வண்ணம் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
புதுவையில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள போலி வாக்குகளை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படும் அன்று புதுச்சேரியிலும் தேர்தலை நடத்த வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கினை நடைமுறைப்படுத்தினால் அதை முறைகேடாக குடும்பத்தில் உள்ளவர்களும், பிறரும் பதிவு செய்யக்கூடும். எனவே அவர்களுக்கு தபால் வாக்கினை அனுமதிக்க கூடாது. அதேசமயம் அவர்களும் வாக்களிக்க வாக்குச்சாவடியில் தனிப்பாதை ஏற்படுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கவேண்டும். இதேபோல் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்களையும் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்களை நீக்கவேண்டும். 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்கவேண்டும். தொற்று பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் கொடுத்த மனுவில்,
கவர்னர் கிரண்பெடியின் அதிகார துஷ்பிரயோகத்தால் கலெக்டராக இருந்த அருண் மாற்றப்பட்டு பூர்வாகார்க் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமை தேர்தல் அதிகாரியான சுர்பிர்சிங், பூர்வா கார்க் இருவரும் கவர்னர் கிரண்பெடியின் சொந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவர்னரின் செயல்பாட்டிற்கு ஒத்துழைப்போடு செயல்படக் கூடியவர்கள். எனவே அவர்கள் இருவரும் தேர்தல் பணிகளில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story