மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சிக்கு வந்தன


மராட்டிய மாநிலத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சிக்கு வந்தன
x
தினத்தந்தி 23 Dec 2020 6:22 AM IST (Updated: 23 Dec 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இருந்து முதல் கட்டமாக திருச்சிக்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

திருச்சி,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்திற்கு 1,220 மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்கள், 3,490 கட்டுப்பாட்டு கருவிகள், வாக்களித்ததை உறுதி செய்வதற்கான 4,560 விவிபேட் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இதில் முதல் கட்டமாக நேற்று ஒரு லாரியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்புடன் 570 கட்டுப்பாட்டு கருவிகளும், 230 விவிபேட் கருவிகளும் திருச்சிக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்டன.

இந்த எந்திரங்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் ஆய்வு செய்த பின் அவை அனைத்தும், லாரியில் இருந்து பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

கலெக்டர் பேட்டி

இதனை தொடர்ந்து கலெக்டர் சிவராசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தின் 2 மாவட்டங்களில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவற்றில் முதல் கட்டமாக இன்று (அதாவது நேற்று) வந்து உள்ளவை தவிர மீதம் உள்ள எந்திரங்கள் மற்றும் கருவிகள் புதன்கிழமை திருச்சிக்கு வந்து சேரும். தற்போது நமது தேவை போக 30 முதல் 40 சதவீதம் எந்திரங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் தேவையை விட 170 சதவீதம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதால் மராட்டிய மாநிலத்தில் இருந்து கருவிகள் வரப்பெற்று இருக்கிறது.

நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கருவிகளும் வந்து சேர்ந்ததும் அதில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ரேண்டமிசேஷன் செய்யப்படும். அதன் பின்னர் பெல் பொறியாளர்களின் சரிபார்த்தலுக்கு பின்னர் தொகுதி வாரியாக அனுப்பிவைக்கப்படும்.

810 கூடுதல்வாக்குச்சாவடிகள்

நமது மாவட்டத்தில் ஏற்கனவே 2,537 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர் என்ற அடிப்படையில் பார்த்தால் கூடுதலாக 810 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவேண்டியது உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story