திருச்சி விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பயணிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 23 Dec 2020 6:41 AM IST (Updated: 23 Dec 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

கொரோனா பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் பன்னாட்டு விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் சமீப காலமாக கிலோ கணக்கில் தங்கம் கடத்தி வருவதும், அவற்றை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகி வருகிறது.

ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல்

இந்தநிலையில் நேற்று காலை துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானம் திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்ரசாக் (வயது 40) என்ற பயணி தனது சட்டையில் 1 கிலோ 173 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுபோல் சிங்கப்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் திருச்சிக்கு வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் (34) தனது சூட்கேசில் 249 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.73 லட்சம் ஆகும்.

Next Story