மராட்டியத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு எந்திரங்கள் வருகை


மராட்டியத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு எந்திரங்கள் வருகை
x
தினத்தந்தி 23 Dec 2020 11:10 AM IST (Updated: 23 Dec 2020 11:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு எந்திரங்கள் வந்துள்ளன.

திருவண்ணாமலை,

வருகிற 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கிற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தலைமையில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதில் 1,480 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,780 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,150 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் ஆகியவை வந்து உள்ளன.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்து உள்ளது. ஏற்கனவே உள்ள எந்திரங்கள் மற்றும் வரப்பெற்ற எந்திரங்கள் என தற்போது 5,037 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3,852 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 4,152 ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் உள்ளன.

சரிப்பார்ப்பு பணி

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு வசதியாக 1,000 வாக்காளர்கள் மேல் கொண்ட வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. தற்போது நமது மாவட்டத்தில் 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன.

கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 590 ஆக உள்ளது. அதன்படி 2,962 வாக்குச்சாவடிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் அமைய வாய்ப்பு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,962 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் 70 சதவீதமும், கட்டுப்பாட்டு எந்திரங்கள் 30 சதவீதமும், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள் 40 சதவீதமும் கூடுதலாக உள்ளது. வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021-க்கு பயன்படுத்துவற்காக மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு எந்திரங்களை முதல் நிலை சரிப்பார்ப்பு பணிக்காக பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் விரைவில் வர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story