வட நெம்மேலி முதலை பண்ணையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு ஆமை திருட்டு


வட நெம்மேலி முதலை பண்ணையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு ஆமை திருட்டு
x
தினத்தந்தி 24 Dec 2020 1:32 AM IST (Updated: 24 Dec 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

வட நெம்மேலி முதலை பண்ணையில் பார்வையாளர்களுக்கு காட்சி படுத்தப்பட்டு வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள அரிய வகையான வெளிநாட்டு ஆமை ஒன்று திருடப்பட்டது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வட நெம்மேலி முதலை பண்ணையில் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

முதலைகள் ஒரு புறம் பராமரிக்கப்பட்டு வந்தாலும் மறுபுறம் இந்த பண்ணையில் முகப்பு வாயில் பகுதியில் கம்பி வேலி அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் அல்டாப்ரா என்ற அரிய வகை 4 வெளிநாட்டு ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆமைகள் இந்தோனேசியா அருகில் உள்ள காலபாக்சஸ் தீவில் உள்ள நிலப்பரப்பு பகுதிகளில் வாழ்ந்து வருபவை ஆகும்.

அங்கிருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஆமைகள் 1½ மீட்டர் நீளம் வரை வளரும் தன்மை கொண்டவை, இவை 225 கிலோ எடை வரை வளரும். மேலும் 152 ஆண்டுகள் வரை வாழும் தன்மை உடைய இந்த ஆமை விலங்குகளிலேயே அதிகமான ஆண்டுகள் வாழும் அரிய விலங்கினம் என்ற பெயர் பெற்றதாகும். முழுக்க முழுக்க புல், செடிகள், பழங்கள், கீரைகள், போன்ற தாவரங்களையே உணவாக உட்கொள்ளும். இப்படி விலை மதிப்புடைய இந்த அரிய வகையான 4 ஆமைகளில் ஒரு ஆமை கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் திருடப்பட்டு விட்டன.

முதலைப்பண்ணை பராமரிப்பாளர்கள் கம்பி வேலிக்குள் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள அரிய வகை ஆமை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கம்பி வேலிக்கு கீழ் 4 சுவர்களுக்கு மத்தியில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆமை வேறு இடத்திற்கு நகர்ந்து செல்ல வாய்ப்பு இல்லை எனவும், திட்டமிட்டு யாரோ இதன் மதிப்பு அறிந்து திருடி சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகித்த முதலைப்பண்ணை நிர்வாகத்தினர், மாமல்லபுரம் போலீசில் இது குறித்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து,

அந்த முதலை பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது இந்த அரிய வகை ஆமையை திருடி சென்றனரா? அல்லது வெளிநபர்கள் யாராவது இரவு நேரத்தில் முதலைப்பண்ணைக்குள் அத்துமீறி நுழைந்து ஆமையை திருடிச் சென்றனரா? என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story