ஜெயிலில் தண்டனை கைதிகளுக்கான சீருடை அணிய இந்திராணி மறுப்பு - கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்


ஜெயிலில் தண்டனை கைதிகளுக்கான சீருடை அணிய இந்திராணி மறுப்பு - கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்
x
தினத்தந்தி 24 Dec 2020 6:24 AM IST (Updated: 24 Dec 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் தண்டனை கைதிகளுக்கான சீருடையை அணிய இந்திராணி முகர்ஜி மறுத்து உள்ளார்.

மும்பை,

பிரபல தனியார் டி.வி. சேனலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் இந்திராணி முகர்ஜி. இவர் தனது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் போலீசார் இந்திராணியின் முன்னாள் கணவர் பீட்டர் முகர்ஜி, சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோரையும் கைது செய்து இருந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்திராணி மும்பை பைகுல்லா பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இவர் தவிர மற்ற அனைவரும் தண்டனை கைதிகள் என கூறப்படுகிறது. எனவே சிறை துறையினர் தண்டனை கைதிகளுக்கான பச்சை நிற சேலை சீருடையை அணியுமாறு இந்திராணியிடமும் கூறியுள்ளனர். ஆனால் விசாரணை கைதியான அவர், தண்டனை கைதிகளுக்கு உரிய சீருடையை அணிய மறுத்து உள்ளார்.

மேலும் தண்டனை கைதிகளுக்கான சீருடையை அணிவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மும்பை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். மனுவை விசாரித்த கோர்ட்டு இந்த விவகாரத்தில் ஜனவரி 5-ந் தேதி பதில் அளிக்குமாறு சிறை துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story