நெல்லை-தென்காசியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்


நெல்லை-தென்காசியில் வருவாய்த்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 9:55 AM IST (Updated: 24 Dec 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

தென்காசி,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை தர்ணா மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் காலியிட மதிப்பீடு அறிக்கையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும். துணை ஆட்சியர் பட்டியலை கோர்ட்டு தீர்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு நெல்லை மாவட்ட தலைவர் சுப்பு தலைமை தாங்கினார். மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஏசுராஜன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் முகமது புகாரி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் பால்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ரவிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் திருமலை முருகன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோயில் பிச்சை, மாவட்ட இணைச் செயலாளர் மாடசாமி, சுகாதார அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

Next Story