கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து தோட்டத்திற்குள் புகுந்த பஸ் வாலிபர் உள்பட 7 பேர் காயம்
கூடலூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பஸ் ஒன்று தோட்டத்திற்குள் புகுந்த விபத்தில் வாலிபர் உள்பட 7 காயம் அடைந்தனர்.
கூடலூர்,
கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று நேற்று காலை பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கம்பத்தை சேர்ந்த மணிவண்ணன் (வயது 36) என்பவர் ஓட்டினார். அந்த பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலை அப்பாச்சி பண்ணை என்ற இடத்தில் அந்த பஸ் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் வலதுபுறத்தில் இருந்த தோட்டத்திற்குள் புகுந்தது. சில நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் பஸ்சில் வந்த பயணிகள் அபயகுரல் எழுப்பினர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கூடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை பஸ்சில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பஸ்சில் வந்த மேலும் 6 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பஸ் கட்டுப்பாட்டை இழந்தபோது எதிரே எந்தவொரு வாகனமும் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று பஸ்சில் வந்தவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக கூடலூர் வழியாக செல்லும் திண்டுக்கல்-குமுளி நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையில் தான் அதிவேகத்தில் இயக்கப்பட்ட தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து தோட்டத்திற்குள் புகுந்தது. எனவே அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story