நிதிநிறுவனம் மூலம் ரூ.40 கோடி மோசடி தம்பதி உள்பட 3 பேர் கைது
உத்தமபாளையத்தில் நிதிநிறுவனம் மூலம் ரூ.40 கோடி மோசடி செய்த வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 3 தனியார் நிதிநிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிதிநிறுவனங்களில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் வட்டித்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் மாதாந்திர சீட்டும் நடத்தப்பட்டது. இதில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர்.
அதற்கு நிதிநிறுவனத்தில் இருந்து உரிய வட்டித்தொகை வழங்கப்பட்டது. இதனால் வட்டித் தொகையை வாங்கியவர்கள், மாதாந்திர சீட்டிலும் சேர்ந்து பணத்தை செலுத்தினர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்த நிதிநிறுவனத்தினர் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு அந்த நிதிநிறுவனங்களும் திடீரென மூடப்பட்டன.
இதனால் பணத்தை முதலீடு செய்தவர்கள், மாதாந்திர சீட்டில் சேர்ந்தவர்கள் பணத்தை திரும்ப பெறமுடியாமல் தவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதில் தேனி உள்பட 3 மாவட்டங்களில் இருந்தும் இதுவரை மொத்தம் 550 பேர் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நிதிநிறுவனங்களில் முக்கிய நிர்வாகியாக இருந்த அஜிஸ்கான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்னரே முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி நடந்ததை போலீசார் கண்டறிந்தனர்.
அதில் புகார் அளித்துள்ள 550 பேரிடமும், ரூ.40 கோடி அளவுக்கு மோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிதிநிறுவனங்களின் நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் அந்த நிதிநிறுவன கணக்காளரான கோம்பையை சேர்ந்த கருப்பசாமி (வயது 58), உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த தர்விஷ்அக்தர் (32), அவருடைய மனைவி ரஸ்மியாபாத்திமா (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து, அந்த நிதிநிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள், சீட்டில் சேர்ந்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story