மாவட்டம் முழுவதும் 23 பேரூராட்சிகளில் பா.ம.க. மனு கொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 பேரூராட்சி அலுவலகங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாடிக்கொம்பு,
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, பேரூராட்சிகளில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம், நத்தம் தொகுதி செயலாளர் ஆரோக்கியதாஸ் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் பட்டிவீரன்பட்டியில் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் கோபால் தலைமையிலும், தாடிக்கொம்புவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சோலைராஜன் தலைமையிலும், அகரம் பேரூராட்சியில் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி தலைமையிலும், சித்தையன்கோட்டையில் தெற்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், சேவுகம்பட்டியில் மாநில துணை அமைப்பு செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் மனு கொடுத்து போராட்டம் நடத்தினர்.
பழனி பகுதியில் பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, கீரனூர் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலகங்களில் மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமையிலும், வத்தலக்குண்டுவில் பா.ம.க தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும், நிலக்கோட்டையில் மாநில இளைஞர் அணி செயலாளர் நாகேந்திரன் தலைமையிலும், அம்மையநாயக்கனூரில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் தலைமையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story