மூன்றாம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும் நிலையில் பி.ஏ.பி.வாய்க்காலை தூர்வார வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
மூன்றாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் பி.ஏ.பி. வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்றுகாலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலிக்காட்சி மூலமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிய பகுதிகளில் வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு:-
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் தாலுகாவில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி 6 மாதமாக கலெக்டரிடம் தெரிவித்து தீர்வு எட்டப்படவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. திருமூர்த்தி அணையில் தற்போது 49 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இந்த முறையாவது உயிர் தண்ணீராக உப்பாறு அணைக்கு இந்த மாத இறுதிக்குள் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
தாராபுரம் தாலுகா பொன்னாபுரம் கிராமம் குள்ளிப்பள்ளம் என்ற இடத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரியிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் தேங்காய் தொட்டிகளை எரிக்கும் தொழிற்சாலை செயல்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. தொழிற்சாலையை உடனடியாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கேயம் தாலுகா வட்டம் மலை கிராமம் அவினாசிபாளையம் புதூரில் கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகை விவசாய நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம் தாலுகாவில் அமராவதி பாசன பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள அலங்கியம், கோவிந்தாபுரம் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தாராபுரம் வடக்கு கிராம விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
எனவே தாராபுரம் வடக்கு கிராம நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வகையில் நல்லமை நகரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பி.ஏ.பி. 3-ம் மண்டலத்திற்கு வருகிற ஜனவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே பல்லடம் விரிவாக்க பகுதியான மங்கலம் பாசன சபைக்கு உட்பட்ட சின்ன காளிபாளையம், இடுவாய் போன்ற கிளை வாய்க்கால்களில் புதர்மண்டி கிடக்கிறது. தண்ணீர் முறையாக கடைமடை பகுதி வரை செல்ல வாய்க்கால்களை தூர்வார பொதுப்பணித்துறையினர், குடிமராமத்து பணிகள் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மங்கலத்தில் கால்நடை மருந்தகம் உள்ளது. இங்கு அருகில் உள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு வருகிறார்கள். தினமும் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு டாக்டர் மட்டுமே இருக்கிறார். கால்நடை ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் யாருமில்லை. இதனால் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே தேவையான ஊழியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மேலும் கால்நடைகளின் தேவைக்கு தண்ணீர் தொட்டி உள்ளது. அது பழுதடைந்து உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை கேட்ட கலெக்டர், அந்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, இணை இயக்குனர் (வேளாண்மை) மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மகாதேவன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story