பெண்ணை கொன்ற கள்ளக்காதலனுக்கு 10 ஆண்டு ஜெயில் கோபி கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை கொன்ற கள்ளக்காதலனுக்கு 10 ஆண்டு ஜெயில் கோபி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Dec 2020 7:07 PM IST (Updated: 24 Dec 2020 7:07 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கொன்ற கள்ளக்காதலனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

கடத்தூர், 

கோபி அருகே உள்ள அளுக்குளி, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி தங்கமணி (29). இவர் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார்.

தங்கமணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி சோழமாதேவி கரை கிராமத்தில் உள்ள வாய்க்கால் அருகில் ரத்தக்காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இதுதொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பெருமுகைபுதூரைச் சேர்ந்த சின்னச்சாமி (39) என்பவருக்கும், தங்கமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், தங்கமணி, வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இது சின்னச்சாமிக்கு தெரிய வந்தது.

இது குறித்து பேசுவதற்காக சின்னச்சாமி தங்கமணியை சோழமாதேவி கரை கிராமத்தில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னச்சாமி, தங்கமணியை கல்லால் தாக்கியும், வாய்க்கால் தண்ணீரில் மூழ்கடித்தும் கொலை செய்தது தெரியவந்தது. இதையொட்டி போலீசார் சின்னச்சாமியை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் தங்கமணியை கொலை செய்த குற்றத்துக்காக சின்னச்சாமிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதி்த்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சின்னச்சாமியை போலீசார் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story