ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு


ராணிப்பேட்டையில் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 24 Dec 2020 9:18 PM IST (Updated: 24 Dec 2020 9:18 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை நிபுணர்கள் குழு நேரில் ஆய்வுசெய்து வருகின்றனர்.

சிப்காட்(ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளால் ஆறுகள், ஏரிகள் மற்றும் நிலத்தடிநீர் மாசு பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் சுயமாக வழக்கு ஒன்றை எடுத்து, பலதுறை நிபுணர்கள் அடங்கிய குழுவை ஆய்வு செய்ய நியமித்துள்ளது.

இந்தக் குழுவில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அலுவலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், சிப்காட் திட்ட அலுவலர், தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குனர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், பொதுப்பணித்துறை நிலத்தடி நீர்வளத்துறை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் ராணிப்பேட்டையில் உள்ள அதிக மாசுபடுத்தும் சிவப்பு வகைப்பாடு தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். நிபுணர் குழு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிப்பு ஆலை, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறது.

தொழிற்சாலைகளில் இருந்து சட்டவிரோதமாக கழிவுநீர் ஏரிகள் மற்றும் கால்வாய்களில் திறந்து விடப்படுகிறதா? என்பதைக் கண்டறிய நீர் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இதன் சோதனை முடிவுகள் மற்றும் ஆய்வறிக்கை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்படும். தீர்ப்பாயம் அளிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும், என நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொழிற்சாலையில் இருந்து லாரிகளில் கழிவுகள் எடுத்துச் செல்லப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள காலி நிலத்தில் கொட்டப்பட்டு மாசு ஏற்படுத்துவதாக வந்த தகவலையடுத்து, கழிவுகள் ஏற்றி செல்லப்பட்ட லாரியை பறிமுதல் செய்து, தனியார் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்த உதவி கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story