மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு தேவையா என்பதை முடிவு செய்யுங்கள் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு


மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு தேவையா என்பதை முடிவு செய்யுங்கள் தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 24 Dec 2020 10:05 PM IST (Updated: 24 Dec 2020 10:12 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு தேவையா? என்பதை முடிவுசெய்யுங்கள் என்று பேரணாம்பட்டு அருகே தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியனார்.

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு ஒன்றியம் மேல்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்கிற தலைப்பில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணாம்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் பொகளூர் ஜனார்த்தனன் வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோதும், கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதும் தமிழக மக்களின் நலன்கருதி, குடும்ப அட்டைகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்தது. அப்போது தமிழக மக்களை புறக்கணித்த அ.தி.மு.க. அரசு, தேர்தல் நேரம் நெருங்கி விட்டதால், பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குகிறது. இந்த ஆண்டு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பை கடந்த 3 ஆண்டுகளாக முதல்வர் ஏன் அறிவிக்கவில்லை. தேர்தலுக்காகவே இந்த ஆண்டு பொங்கல் பரிசை அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ளது.

இந்த தொகுதிக்கு எம்.எல்.ஏ. இல்லை. கதிர்ஆனந்த் எம்.பி. இந்த தொகுதியை தத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பா என்கிற முறையில் அல்ல, கட்சி பொது செயலாளர் என்பதால் கூறுகிறேன்.

இந்த ஆட்சியில் தகுதியானவர்களுக்கு முதியோர் உதவித் தொகை நிராகரிக்கப்படுகிறது. சமையல் கியாஸ் வி்லை ஒரு மாத்திற்குள் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசு தேவையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்கள் தெருவில் நடமாட முடியாக நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தில் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததால், பெரிய, பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் தமிழகத்திலிருந்து வெளியேறி, வேறு மாநிலங்களுக்குச் சென்று விட்டன.

தி.மு.க. ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன், தற்போது ரூ.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடனுக்கு வட்டி கட்டக்கூட தமிழக அரசால் முடியவில்லை.

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் மலிந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், 365 நாட்களும் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படும். புயல், வெள்ளத்தின்போது மத்திய அரசு கொடுத்த அரிசியை ஏழைகளுக்கு வழங்காமல், மாநில அமைச்சர்கள் வெளிமார்க்கெட்டில் விற்றுவிட்டார்கள். ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எதுவும் இல்லாததால் தான், ஊழல் செய்த அமைச்சர்களின் பட்டியல், தகுந்த ஆதாரங்களுடன் தி.மு.க. சார்பில் ஆளுனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசி்னார்.

80 வயது முதியவர்கள் தபால் ஒட்டு போடலாம் என்பது குறித்து கேட்டபோது அதில் நிறைய முறை கேடு நடக்கும். அதை ஒரு போதும் தி.மு.க. ஆதரிக்காது என்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜய், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தன், சின்னசாமி, ஞானசேகரன், நகர தி.மு.க. செயலாளர் ஆலியார் ஜீபேர் அஹம்மத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story