காசோலை வழங்க ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் ‘ஆவின்’ மேலாளர் கைது கையும் களவுமாக பிடிபட்டார்
வேலூர் ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்ததற்கு காசோலை வழங்க ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வேலூர்,
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வந்தது. இந்த 4 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் பால் ஆவின் வளாகத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் பதப்படுத்தப்பட்டன.
பின்னர் அவை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இங்கு திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே உள்ள சொரக்குளத்தூரை சேர்ந்த முருகையன் (வயது 50) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பால் சப்ளை செய்து வந்தார். அவர் கொடுக்கும் ஒரு லிட்டர் பாலுக்கு 40 பைசா வீதம் கமிஷன் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
முருகையன், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து, ஆவின் நிறுவனத்துக்கு வழங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் புதிதாக தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்துக்கு பால் சப்ளை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை பால் சப்ளை செய்த வகையில் முருகையனுக்கு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் ஆவின் நிறுவனம் வழங்க வேண்டியிருந்தது. இந்த தொகையை தரும்படி ஆவின் அதிகாரிகளுக்கு பலமுறை அவர் கோரிக்கை வைத்தும் காலம் கடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்துக்கான காசோலை தயாராக உள்ளது என்று ஆவின் அலுவலகத்தில் இருந்து முருகையனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை பெறுவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அவர் வேலூர் ஆவின் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆவின் பால் கொள்முதல் பிரிவு மேலாளர் ரவி (வயது 54) காசோலை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதனால் அதிர்ச்சி அடைந்த முருகையன் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் ரவியை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அடங்கிய ரூ.50 ஆயிரத்தை முருகையனிடம் வழங்கினர். அவற்றை அவர் காலை 11.30 மணி அளவில் ஆவின் அலுவலகத்தில் இருந்த மேலாளர் ரவியிடம் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து அந்த அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் மேலாளர் ரவியை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு காரில் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story