9 மாதங்களுக்கு பிறகு அனுமதி: தனுஷ்கோடி கடலின் அழகை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்
9 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமாக தனுஷ்கோடிக்கு சென்று கடலின் அழகை கண்டு ரசித்தனர்.
ராமேசுவரம்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் மூடப்பட்டன. ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி சுற்றுலா தலமும் கடந்த மார்ச் 20-ந் தேதி முதலே மூடப்பட்டது.
9 மாதத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளையொட்டிய சுற்றுலா தலங்கள் கடந்த 14-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் தனுஷ்கோடிக்கு செல்ல தொடர்ந்து தடை நீடித்தது. இதனால் ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு சென்று கடலின் அழகை ரசிக்க முடியாமலும், புயலால் சிதைந்து போன கட்டிடங்களை பார்க்க முடியாமலும் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
எனவே தனுஷ்கோடி சாலையை திறந்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும், அமைப்பினரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி சாலையானது 277 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அரிச்சல்முனை வரை செல்ல ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு நேற்று வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ்,, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சென்றனர். இரண்டு கடல் சேருமிடமான அரிச்சல்முனை கடல் மற்றும் கடற்கரையின் அழகை பார்த்து ரசித்ததுடன் செல்போனிலும் படம் பிடித்து உற்சாகம் அடைந்தனர். மேலும் புயலால் அழிந்து போன கம்பிப்பாடு கடற்கரையில் உள்ள பல கட்டிடங்களையும் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்வையிட்டனர். அரசு எடுத்துள்ள நடவடிக்கையால், சுற்றுலா பயணிகளையே நம்பிவாழும் ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகன டிரைவர்களும் மிகுந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். 9 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து அரிச்சல்முனை வரை அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. ஆனால் முதல் நாள் என்பதால் அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.
தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதித்தது போல், ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளையும் திறந்து, பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story